கோவை: புலியகுளம் பகுதியில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், 212 கிலோ எடையுள்ள குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோவை: புலியகுளம் பகுதியில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், 212 கிலோ எடையுள்ள குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளின் உத்தரவின் பேரில் கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட பான்மசாலா குட்கா குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தொடர் சோதனைகள் நடத்தி வருகின்றனர்.

இந்த சோதனைகளில் கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடைசெய்யப்பட்ட பான் மசாலா குட்கா பொருட்கள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. அதிகாரிகளின் தொடர் சோதனைகள் இருந்தும் சமூக விரோதிகள் தடை செய்யப்பட்ட பான்மசாலா குட்கா போன்ற பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்கின்றனர். பெட்டிக் கடைகளிலும், ஒரு சில கடைகளிலும் குட்கா பொருட்கள் வழக்கம்போல இன்னும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், புலியகுளம் பகுதியில் சுயம்பு ராஜா என்பவர் என்பவர் கடந்த 6 மாதங்களாக மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு தேவையான உணவுப் பொருட்களை சேமித்து வைப்பதற்காக வைத்திருக்கும் குடோனில் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து இருப்பதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், அதிகாரிகள் அங்கு திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையில், அங்கிருந்த 212 கிலோ தடை செய்யப்பட்ட பான் மசாலா பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதன் மதிப்பு சுமார் ரூ. 1,75,000 எனவும் தெரிவித்தனர்.
இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி விஜய லலிதாம்பிகை கூறியதாவது:- நாங்கள் இந்த பான்மசாலா மாதிரிகளை எடுத்துள்ளோம். இந்த மாதிரிகளைப் பகுப்பாய்வுக்கு அனுப்பி, அதிலிருந்து வரும் ஆய்வறிக்கையைக் கொண்டு சட்டப்படியான நடவடிக்கைகளை எடுப்போம். மேலும், இந்த நபர் கடையை நடத்துவதற்கான உரிமம் பெறாமல் உள்ளார். அதேபோல, தொடர்ந்து இதுபோன்ற தடை செய்யப்பட்ட பொருட்களை பதுக்கி வைத்திருந்தால் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.