கோவை: பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான தமிழக அமைச்சர்கள் பதவி விலக வலியுறுத்தி தி.மு.க மற்றும் அதன் தோழமை கட்சிகள் இன்று கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான தமிழக அமைச்சர்கள் பதவி விலக வலியுறுத்தி தி.மு.க மற்றும் அதன் தோழமை கட்சிகள் இன்று கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தி.மு.க.,வின் மாநில துணை பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்றும், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான அ.தி.மு.க., அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க, கொ.ம.தே.க., ஆதி தமிழர் பேரவை, த.பெ.தி.க., உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து தி.மு.க., துணை பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி செய்தியாளர்களிடம் பேசியதாவது:- உள்ளாட்சித் துறையில் ஊழல் எஸ்.பி., வேலுமணி, நெடுஞ்சாலை துறையில் ஊழல் எடப்பாடி பழனிசாமி, சத்துணவில் ஊழல் காமராஜ், குட்கா புகழ் விஜயபாஸ்கர் ஆகியோரின் ஊழலைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உலக வங்கியின் விதிமுறைகளை மீறி முதலமைச்சரின் உறவினர்களுக்கு டெண்டர் வழங்கப்பட்டு இருக்கிறது. உயர்நீதிமன்றம் அதை கணக்கில் எடுத்து இருக்கிறது.

மேலும், குட்கா வழக்கில் லஞ்சம் கொடுத்த மாதவராவ் கைது செய்யப்பட்ட நிலையில், லஞ்சம் வாங்கிய அமைச்சர் விஜயபாஸ்கரை ஏன் கைது செய்யவில்லை..?. இந்தியாவிலேயே அதிகளவு ஊழல் செய்தவர் கோவை மாவட்ட அமைச்சர் எஸ்.பி., வேலுமணிதான். பிளீச்சிங் பவுடர், பினாயில் போன்றவற்றிலும் அமைச்சர் வேலுமணி ஊழல் செய்து இருக்கின்றார். இதேபோல, பொது விநியோகத்துறை உட்பட அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெற்று இருக்கிறது, இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சூழலில், சென்னை கந்தன்சாவடியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட தி.மு.க பொருளாளர் துரைமுருகன், "கேள்வி கேட்பதற்காக ஒருவரை பா.ஜ.க.,வினர் தாக்கியுள்ளனர். கேள்வி கேட்ட குற்றத்திற்காக ஒருவர் மீது வழக்கு தொடர்வதும், அவரை தாக்குவதும் ஜனநாயகம் அல்ல. பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் குழந்தையாக இருக்கும் போதே எனக்கு அவரை தெரியும். அவர் இன்னமும் குழந்தை போலவே நடந்து கொள்கிறார். அவர் இன்னும் கொஞ்சம் அரசியல் கற்க வேண்டும்." என்றார்.