திருப்பூர்: பெரியார் சிலையை சேதப்படுத்தி, சிலையின் மீது காலணி மற்றும் செங்கல் வைத்து அவமதித்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பூர்: பெரியார் சிலையை சேதப்படுத்தி, சிலையின் மீது காலணி மற்றும் செங்கல் வைத்து அவமதித்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தந்தை பெரியாரின் 140-வது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் நேற்று விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், தாராபுரம் பெரியார் சிலை திடலில் கடந்த ஞாயிறன்று நாள் நள்ளிரவு வரை பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இதனையடுத்து, நேற்று காலை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்க திராவிட கழகத்தினர் சென்றனர். அப்போது பெரியார் வெண்கல சிலையின் தலையில் காலணியும், செங்கல்லும் வைக்கப்பட்டிருந்ததுடன், சிலையின் கண்ணாடி பகுதிகள் சேதப்படுத்தப்பட்டிருந்தது.
இதனை கண்ட தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலாளர் சண்முகம் தாராபுரம் காவல் நிலையத்தில் இச்சம்பவம் தொடர்பாக புகார் அளித்ததையடுத்து சிலைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்தனர். அப்போது, நள்ளிரவு நேரத்தில் காரில் வந்த இளைஞர் சிலையை சேதப்படுத்துவது தெரிந்தது. காரின் பதிவெண்ணை கொண்டு விசாரித்ததில் செங்கல் சேம்பர் உரிமையாளர் நவீன் (28) என்பது தெரியவந்தது.
இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.