கோவை : கோவையில் கலவரங்களை செய்த காவலர்களை பா.ஜ.க., ஒருபோதும் காட்டிக் கொடுத்ததில்லை என மத்திய கயிறு வாரிய தலைவர் சி.பி., ராதாகிருஷ்ணன் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : கோவையில் கலவரங்களை செய்த காவலர்களை பா.ஜ.க., ஒருபோதும் காட்டிக் கொடுத்ததில்லை என மத்திய கயிறு வாரிய தலைவர் சி.பி., ராதாகிருஷ்ணன் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் தெப்பக்குளம் மைதானத்தில் நடந்த விநாயகர் சதுர்த்தி பொதுக்கூட்டத்தில் மத்திய கயிறு வாரிய தலைவரும், பா.ஜ.க., தேசிய குழு உறுப்பினருமான சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது :- கடந்த 1998-ம் ஆண்டு நடந்த கோவை குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு காரணமான காவலர் செல்வராஜ் வெட்டிக் கொல்லப்பட்டதை அடுத்து, நடந்த அனைத்தையும் (கலவரம்) பா.ஜ.க.,வோ, இந்து முன்னணியோ செய்தது அல்ல. காவல்துறையினரே பொறுக்க முடியாமல் செய்தது தான். ஆனால், காவல்துறையில் ஒருவரை கூட ஒருபோதும் பா.ஜ.க.,வினர் காட்டிக் கொடுக்கவில்லை. காவல்துறையைக் காட்டி கொடுப்பது, தேசத்தை காட்டி கொடுப்பதற்கு நிகரானது என பா.ஜ.க.,வினர் நினைக்கின்றனர்.
இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- விநாயகர் சதுர்த்தி விழாக்கள், மீண்டும் தமிழகம் ஆன்மிக உணர்வுகளுக்கு திரும்பி வருவதை காட்டுகிறது. தமிழகம் பெரியார் மண் அல்ல. ஆன்மீக மண்ணாகும். மேலும், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பெரியார் சிலை செருப்பு மாலை அணிவித்தது போன்ற இழிவான செயல்களில் பா.ஜ.க.,விற்கு நம்பிக்கை இல்லை. மாற்று கருத்துகளை கருத்துகளால் எதிர்ப்பதே காவியின் எண்ணம். வன்முறையை கையில் எடுக்க மாட்டோம். அதேசமயம், வன்முறைக்கு அடிபணிய மாட்டோம்.
நீதிமன்றத்தை அவமதித்ததாகப் பா.ஜ.க., தேசிய செயலாளர் ஹெச். ராஜா மீது அரசு வழக்கு போட்டுள்ளது. அதை எதிர்கொள்ளும் ஆளுமை பா.ஜ.க., தலைவர்களுக்கு உள்ளது. இதற்காக ஒருபோதும் தமிழக அரசிற்கு அடிபணிய மாட்டோம், என்றார்.