கோவை: தன்னை ஏமாற்றி வேறு பெண்ணுடன் திருமணம் செய்ய உள்ள காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி பாதிக்கப்பட்ட பெண் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தார்.
கோவை: தன்னை ஏமாற்றி வேறு பெண்ணுடன் திருமணம் செய்ய உள்ள காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி பாதிக்கப்பட்ட பெண் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தார்.
கோவில்பாளையம் ஏஸ்.எஸ் குளம் பகுதியை சேர்ந்தவர் ராதாமணி. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவருக்கும் கோட்டைபாளையம் பகுதியில் பிளாஸ்டிக் குழாய்கள் விற்பனை செய்து வரும் ரமேஷ்குமாருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், ரமேஷ்குமார் தன்னை ஏமாற்றி வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்வதாகவும், அவரால் கருத்தரித்து ஆண் குழந்தை பெற்றெடுத்த நிலையில், தன்னை அவருடன் சேர்த்து வைக்கக் கோரியும் ராதாமணி இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

இது குறித்து துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும், அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிற்கும் புகார் மனு அனுப்பியும், உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றும், ரமேஷ்குமாரின் தந்தை முக்கிய அரசியல் புள்ளி என்ற காரணத்தால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
வரும் ஞாயிற்றுக்கிழமை ரமேஷ்குமாருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற உள்ளதாகக் கூறிய ராதாமணி, தன்னை ஏமாற்றிய ரமேஷ்குமார் மீது விசாரணை மேற்கொண்டு தனக்கு நீதி கிடைக்க ஆவண செய்ய வேண்டும் என வலியுறுத்தி, அவரது பெற்றோர் மற்றும் 3 வயது மகனுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.