நீலகிரி: உதகையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் இன்று நடைபெற்றது.
நீலகிரி: உதகையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் இன்று நடைபெற்றது.
நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த 13-ம் தேதி இந்து அமைப்புக்கள் சார்பிலும் மற்றும் பொதுமக்கள் சார்பிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
15, 16 மற்றும் 17 ஆகிய மூன்று நாட்கள் மாவட்டத்தில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் நடத்தப்படுகிறது. இரண்டாவது நாளான இன்று உதகையில் இந்து முன்னணி சார்பில் ஊர்வலம் நடத்தப்பட்டது. விசர்ஜன ஊர்வலத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இந்து முன்னணி சார்பில் 97 வாகனங்களில் 128 சிலைகள் ஊர்வலத்தில் பங்கேற்றன. முன்னதாக சேரிங்கிராஸ் தேவங்கார் மண்டபத்தில் இருந்து ஊர்வலம் தொடங்கி கமர்சியல் சாலை, அப்பர் பஜார், மெயின் பஜார் வழியாக பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. பின்னர் காமராஜர் அணையில் சிலைகள் கரைக்கப்பட்டன.
இதேபோல், குன்னூரில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த 65 விநாயகர் சிலைகள் சிம்ஸ் பூங்கா சாலையில் இருந்து ஊர்வலமாக மவுண்ட் ரோடு வழியாக எடுத்து வரப்பட்டு லால்ஸ் நீர் வீழ்ச்சியில் கரைக்கப்பட்டன.