கோவை: கோவை ரயில் நிலையத்தில் சுயநினைவற்ற நிலையில் இருந்த மூதாட்டியை மீட்ட ஈர நெஞ்சம் அறக்கட்டளை அவரை, மகனிடம் சேர்த்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை ரயில் நிலையத்தில் சுயநினைவற்ற நிலையில் இருந்த மூதாட்டியை மீட்ட ஈர நெஞ்சம் அறக்கட்டளை அவரை, மகனிடம் சேர்த்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் மங்களூரில் இருந்து கோவைக்கு வந்த ரயிலில் சுப்பம்மாள் (70) என்ற மூதாட்டி சுயநினைவற்ற நிலையில் ரயில் நிலைய காவலர்களால் மீட்கப்பட்டார். மூதாட்டியின் பாதுகாப்பிற்காக ஈரநெஞ்சம் அறக்கட்டளை முதியோர் காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தார்.
அதனைத் தொடர்ந்து, ஈரநெஞ்சம் அறக்கட்டளை சுப்பம்மாளின் உறவினர்களை தேடும் முயற்சியை மேற்கொண்டது. அப்போது, மூதாட்டியின் மகன் ஜெகதீசன் கிணத்துக்கடவு பகுதியில் இருப்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, இன்று ஜெகதீசனிடம் அவரது தாய் சுப்பம்மாளை கொண்டு சேர்த்துள்ளது ஈர நெஞ்சம் அறக்கட்டளை.
இது குறித்து ஜெகதீசன் கூறுகையில், "மங்களூரில் என்னுடைய சகோதரி ராஜேஸ்வரி வீட்டில் அம்மா தங்கி இருந்தார். கடந்த மாதம் அங்கிருந்து கோவைக்கு எங்கள் வீட்டிற்கு வருவதாக கிளம்பியவர். வீடு வந்து சேரவில்லை. எங்கு தொலைந்தார் என்று தெரியாத நிலையில் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. தற்போது ஈரநெஞ்சம் காப்பகம் எனது தாயை மீட்டுக் கொடுத்துள்ளது." என்றார்