கோவை : ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலையில் மத்திய பா.ஜ.க., அரசு தயக்கம் காட்டுவதாக கோவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கோவை : ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலையில் மத்திய பா.ஜ.க., அரசு தயக்கம் காட்டுவதாக கோவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது :- அரசியலமைப்பு சட்டத்தின்படி பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிக்கலாம் என தமிழக அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது. இதுதொடர்பாக, மத்திய அரசுக்கு ஆளுநர் கடிதம் அனுப்பியுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. உச்சநீதிமன்றம் அதிகாரம் இருக்கின்றது என்று கூறியும், ஆளுநர் எதற்காக மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினார். இது தொடர்பாக ஆளுநரை தமிழக அரசு சந்தித்து முறையிட வேண்டும். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்ய பா.ஜ.க., அரசு தயங்குகிறது. பா.ஜ.க., தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தால் 7 பேருக்கு விடுதலை இருக்கும் என்ற எண்ணம் மக்களிடம் இருந்த நிலையில், தற்போது உண்மை நிலை வேறாக உள்ளது.
மேலும், ரகுராம் ராஜன் அறிக்கை குறித்து பிரதமர் மோடி வாய்திறக்கவில்லை. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ரூ. 12 லட்சம் கோடி வாராக்கடன் இந்த ஆட்சியில் மட்டும் வழங்கவில்லை என்றாலும், 80% வாராக்கடன் பா.ஜ.க., தலைமையிலான ஆட்சியில் வழங்கப்பட்டுள்ளதால் இதற்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி பதவி விலக வேண்டும்.
நிலக்கரி விவகாரம் மட்டுமின்றி நீட் தேர்வு, ஒக்கி புயல் நிவாரண நிதி, தாழ்த்தப்பட்டோருக்கு அளிக்கப்பட்டு வந்த நிதியை மீண்டும் வழங்க வேண்டும் என பல்வேறு விவகாரங்களுக்கு தமிழக முதலமைச்சர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறார். ஆனால், மத்திய அரசு உரிய பதில் அளிக்கவில்லை. மத்திய அரசின் மேலாதிக்கத்திற்கு கட்டுப்பட்ட அரசாக தற்போதைய மாநில அரசு உள்ளது. தென்காசியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இஸ்லாமியர் குடியிருப்புக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தமிழகத்தில் வருமான வரித்துறை, சி.பி.ஐ சோதனைகள் அதிகமாக நடக்கிறது. சோதனை நடைபெறுகிறது என்பதால் குற்றவாளி என்று அர்த்தம் கிடையாது. இந்த சோதனைகள் மூலம் அரசை அச்சுறுத்துகிறார்கள் அல்லது மக்களிடம் அக்கட்சியின் மதிப்பைக் குறைக்கவே இதுபோன்ற சோதனை நடைபெறுகிறது என்ற கருத்தும் இருக்கின்றது. குட்கா விவகாரத்தில் புகாருக்குள்ளான அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி., மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்த்திருந்த நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கட்சியில் பதவி வழங்கியிருப்பது வியப்பை அளிக்கிறது, இவ்வாறு அவர் கூறினார்.