திருப்பூர் : பல்லடம் அருகே சித்தம்பலத்தில் நூற்பாலை மேற்பார்வையாளர் கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக வடமாநில தொழிலாளர்கள் 7 பேரைப் பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
திருப்பூர்: பல்லடம் அருகே சித்தம்பலத்தில் நூற்பாலை மேற்பார்வையாளர் கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக வடமாநில தொழிலாளர்கள் 7 பேரைப் பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வீரக்குடி பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (44). இவர் தனது மனைவி வெங்கடேஸ்வரி மற்றும் குணாநிதி, தயாநிதி ஆகிய இரண்டு மகன்களுடன் பல்லடம் வடுகபாளையத்தில் குடியிருந்து கொண்டு, சித்தம்பலம் அருகே உள்ள தனியார் நூற்பாலை ஒன்றில் மேற்பார்வையாளராக பத்து வருடங்களுக்கும் மேலாக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், நேற்று நள்ளிரவு நூற்பாலையில் வடமாநிலத் தொழிலாளர்கள் சிலர் மேற்பார்வையாளர் நாகராஜிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதில், நாகராஜ் கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து ஆலை நிர்வாகம் கொடுத்த புகாரினைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீஸ் மோப்பநாய் டெவில் உடன் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மோப்பநாய் நாகராஜின் உடலைச் சுற்றிவந்து அங்கேயே நின்றுவிட்டது. யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை.

இதையடுத்து, பல்லடம் போலீசார், நாகராஜின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், இக்கொலைக்கான காரணம் குறித்து நூற்பாலையில் வேலை செய்து வரும் வடமாநிலத் தொழிலாளர்கள் ஏழு பேரைப் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பல்லடத்தில் நூற்பாலை மேலாளர் ஒருவர் வடமாநிலத் தொழிலாளர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து கொலையானவரின் அண்ணன் ரவிச்சந்திரன் கூறுகையில், “தனது தம்பியின் கொலைக்கான காரணத்தை போலீசார் கண்டுபிடித்து கொலையாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தரவேண்டும். இறந்தவரது குடும்பத்தினருக்கு ஆலை நிர்வாகம் இழப்பீடு வழங்க வேண்டும்,” எனக் கேட்டுக்கொண்டார்.