கோவை : காந்திபுரம் டெக்ஸ்டூல் மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்த ஆம்னி காரில் பின்புற பகுதியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து கொஞ்சம் கொஞ்சமாக பரவி கார் முழுவதும் எரிந்தது.
கோவை: காந்திபுரம் டெக்ஸ்டூல் மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்த ஆம்னி காரில் பின்புற பகுதியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து கொஞ்சம் கொஞ்சமாக பரவி கார் முழுவதும் எரிந்தது.

கோவை கணபதி பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர் மோட்டார் பம்ப் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகின்றார். இவர், தொழில் நிமிர்த்தமாக ஆம்னி கார் ஒன்றை வைத்து பயன்படுத்தி வந்துள்ளார். இந்த நிலையில், இன்று மாலை இந்த காரை நிறுவனத்தில் பணிபுரியும் ராமகிருஷ்ணன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். கார் டெக்ஸ்டூல் மேம்பாலத்தில் வந்து கொண்டு இருந்த போது காரின் பின்பகுதியில் திடீர் என தீ பிடித்தது. இந்த தீயானது வேகவேகமாக கார் முழுவதும் பரவியது.

பின்னர், தீ விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் அரைமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீவிபத்து காரின் பின் பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகின்றது. தீ விபத்து ஏற்பட்டவுடன் காரை ஓட்டி வந்த ஓட்டுனர் ராமகிருஷ்ணன் காரில் இருந்து இறங்கிவிட்டதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்து குறித்து தீயணைப்பு துறையினரும், காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.