கோவை : ரபேல் விமானம் வாங்கியதில் முறைகேடு நடந்ததாகக் கூறி மத்திய அரசைக் கண்டித்து கோவையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை : ரபேல் விமானம் வாங்கியதில் முறைகேடு நடந்ததாகக் கூறி மத்திய அரசைக் கண்டித்து கோவையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை - அவினாசி சாலையில் உள்ள அண்ணாசிலை சிக்னலில் இருந்து தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் வரை மத்திய அரசைக் கண்டித்து ஊர்வலமாகச் சென்றனர். அப்போது, ரபேல் விமானம் போன்ற உருவ பொம்மையை எடுத்துக் கொண்டு மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியாறு சுமார் 2,000-க்கும் மேற்பட்டோர் பேரணியாக வந்தனர்.

இதில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் சஞ்சய் தத், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், கோவை மாநகர் மாவட்ட தலைவர் மயூரா ஜெயகுமார், புறநகர் மாவட்ட தலைவர்கள் வி.எம்.சி., மனோகரன், பொள்ளாச்சி சக்திவேல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.என்.,கந்தசாமி, முன்னாள் மேயர் காலனி வெங்கடாசலம், மாநில பொது செயலாளர் வீனஸ் மணி, மாநில துணை தலைவர் ராதாகிருஷ்ணன் உட்பட ஏராளமான காங்கிரஸ் கட்சியினைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

போராட்டத்தின் போது செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் கூறியதாவது :- பெட்ரோலிய பொருட்கள் விலையேற்றம் மூலம் ரூ. 11,000 கோடியை அரசு மற்றும் பெட்ரொலிய நிறுவனங்களால் மக்களிடம் இருந்து சுரண்டப்பட்டுள்ளது.
ரபேல் விமானம் ஒப்பந்தத்தில் ஒரு லட்சம் கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்றுள்ளது. ரூ. 526 கோடிக்கு வாங்க வேண்டிய விமானத்தை ரூ. 1,670 கோடிக்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன..?. அதோடு, தொடங்கிய 10 நாட்களே ஆன தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளது. ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் முரண்பாடான தகவல்களை தெரிவித்து வருகிறார், என்றார்.

இதைத் தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் பேசுகையில், "ரபேல் போர் விமானம் வாங்கும் ஒப்பந்தத்தில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இது தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
மத்திய அரசு வீழ வேண்டிய அரசாகும். வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து இருக்கிறது. தமிழகத்தில் நடப்பது பா.ஜ.க.,வின் B - team ஆட்சியாகும். பெட்ரோல், டீசல் விலை உயர்வில் 11 லட்சம் கோடி ரூபாய் மக்களின் பணத்தை வீணடித்து இருக்கிறார்கள்," எனக் கூறினார்.