நீலகிரி : விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தின் முக்கிய வீதிகளில் 900-க்கும் மேற்பட்ட போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
நீலகிரி : விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தின் முக்கிய வீதிகளில் 900-க்கும் மேற்பட்ட போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

உதகையில் 15 மற்றும் 16-ம் தேதிகளில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் நடைபெற உள்ளது. எனவே, உதகை பகுதி பதற்றம் நிறைந்த பகுதியாக முன்னதாகவே கண்டறியப்பட்டு, அதற்காக கூடுதல் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த காவல்துறை முடிவெடுத்துள்ளது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா தலைமையில் 912 போலீசார் ஒருங்கிணைத்து உதகையில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.

இந்த அணிவகுப்பு பழங்குடியினர் பண்பாட்டு மையம் பகுதியில் தொடங்கி சேரிங்கிராஸ், வர்த்தக சாலை, மார்க்கெட், மெயின் பஜார், மத்திய பேருந்து நிலையம் வழியாக காந்தல் பகுதியைச் சென்றடைந்தது. இந்தாண்டு மாவட்டம் முழுவதும் 562 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், மேட்டுப்பாளையம் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட விநாயகர் சிலைகள் அனைத்தும் நாளை அங்குள்ள முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பவானியாற்றில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு இன்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசாரின் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. மேட்டுப்பாளையத்தின் நகர வீதிகள் வழியாக அதிரடிப்படை, அதிவிரைவுப்படை, கலவர தடுப்புப்படை மற்றும் உள்ளூர் போலீசார் என 250-க்கும் மேற்பட்ட போலீசார் டி.எஸ்.பி மணி தலைமையில் அணி வகுத்து சென்றனர்.
கூட்டத்தைக் கலைக்க பயன்படுத்தப்படும் கண்ணீர் புகை வீசும் வாகனம் மற்றும் தண்ணீரை பீய்ச்சியடிக்கும் வஜ்ரா வாகனம் போன்றவையும் இந்த போலீஸ் கொடி அணிவகுப்பில் பங்கேற்றன.
