கோவை : சாய்பாபா காலனி பகுதியில் வீட்டில் வளர்த்த செல்லபிராணியான நாய் கடித்ததில் படுகாயமடைந்த ஆறு வயது சிறுமி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கோவை : சாய்பாபா காலனி பகுதியில் வீட்டில் வளர்த்த செல்லபிராணியான நாய் கடித்ததில் படுகாயமடைந்த ஆறு வயது சிறுமி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கோவை சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள சர்ச் சாலையில் வசித்து வரும் பாலாஜியின் மகள் ரித்விக்கா(6). இந்த சிறுமி கடந்த 10 ம் தேதி வீட்டில் வளர்த்த செல்லபிராணியான நாய் கடித்து படுகாயம் அடைந்து ஆபத்தான சூழலில் கங்கா மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவருக்கு நாய்கடித்ததில் முகம், கழுத்து, இடது இடுப்பு பகுதி, உச்சந்தலை என உடலின் பல்வேறு பகுதியில் கொடுங்காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இவருக்குத் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கான சிகிச்சைக்கு சுமாராக ரூ .4,00,000 / - வரை மருத்துவ செலவு ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது சிகிச்சைக்காக தங்கியிருக்கும் காலம் மற்றும் சிக்கல்கள் ஆகியவற்றைப் பொறுத்து தொகையானது அதிகரிக்க வாய்ப்பும் உள்ளது.ஆகவே நல் உள்ளம் படைத்தவர்கள் இந்த சிறுமியின் உயிரைக் காப்பாற்ற மருத்துவ செலவிற்கான தங்களால் இயன்ற உதவி செய்யும் படி சிறுமியின் பெற்றோர் கேட்டுள்ளனர். அதே சமயத்தில் தனது குழந்தையை கடித்து குதறியுள்ள நாயை ஒரு குறையும் சொல்லாத அவர் கண்ணீர் மல்க பொதுமக்களிடம் ஊடகம் வாயிலாக மருத்துவ செலவிற்கான தொகையைக் கொடுத்து உதவுமாறு கேட்டு கொண்டுள்ளார்.

இது குறித்து சிறுமியின் தந்தை பாலாஜி கூறியதாவது, "நான் வேலை நிமித்தம் பெங்களூரு சென்று மீண்டும் கோவை நோக்கி வந்து கொண்டிருந்தேன். அப்போது என் குழந்தையை எங்களது நாயானது கடித்துக்குதறியதாக எனக்கு தகவல் வந்தது. இந்த நிலையில் அருகில் இருந்தவர்களும் எனது மனைவியும் சேர்ந்து எனது நாயிடமிருந்து என் குழந்தையை காப்பாற்றி விரைவாக கங்கா மருத்துவமனையில் அனுமதித்தனர்".
என்னிடம் இரண்டு நாய்கள் உள்ளது. அவற்றைக் குழந்தைகள் போல வீட்டில் வளர்த்து வருகிறேன். இதில் ஒரு வயது கொண்ட நாய் தான் என் பிள்ளையை கடித்துள்ளது. ஆனால் எந்த சூழலில் என் குழந்தையை எனது செல்லபிராணி கடித்தது என்று தெரியவில்லை. தற்போது எனது குழந்தை சற்றுத் தேறி வருகிறாள். ஆனால் மேல் சிகிச்சைக்கு எங்கள் சக்திக்கு அப்பாற்பட்ட பணம் தேவைப்படுகிறது. அதேபோல நடுத்தர குடும்பமான எங்களால் லட்சக்கணக்கான ரூபாய் கொடுத்து மருத்துவம் பார்ப்பது முடியாத காரியமாக உள்ளது.
இருப்பினும் நாங்கள் முடிந்தவரை பல்வேறு வகையில் எங்கள் குழந்தையை காப்பாற்ற செலவு செய்து வருகிறோம். ஆனால் அந்த பணமானது போதவில்லை. ஆகையால் நண்பர்களும் இரக்க குணமுள்ளவர்களும் என் குழந்தையை காப்பாற்ற முடிந்த உதவிகளைச் செய்து வருகின்றனர். ஆனால் செலவினம் அதிகமாக இருப்பதால் அவர்கள் கொடுத்த தொகையானது போதவில்லை. ஆகவே என் குழந்தையை காப்பாற்ற அன்புள்ளம் கொண்டவர்கள் உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
அதேபோல எனது ஸ்டேட் பேங் வங்கி கணக்கிலும் ( Jaya balaji Account no- 20389273283. IFSC code SBIN0012656 - Cell number- 9047081999) தங்களால் முயன்ற சிறு சிறு தொகைகள் மூலமாவது உதவி என் குழந்தையின் உயிரை காப்பாற்றுமாறு சிறுமியின் தந்தை கேட்டுக் கொண்டார்.
