தூத்துக்குடி: பா.ஜ.வு.,க்கு எதிராக கோஷமிட்ட புகாரின் பேரில் கைது செய்யப்பட சோபியாவுக்கு தூத்துக்குடி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
தூத்துக்குடி: பா.ஜ.க., வுக்கு எதிராக கோஷமிட்ட புகாரின் பேரில் கைது செய்யப்பட சோபியாவுக்கு தூத்துக்குடி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையிலிருந்து தூத்துக்குடி செல்லும் விமானத்தில் நேற்று (திங்கட்கிழமை) பயணம் செய்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் அவரை பார்த்ததும் சோபியா என்ற பெண், "பாசிச பாஜக ஆட்சி ஒழிக" என கோஷமிட்டார்.
இதையடுத்து, தமிழிசைக்கும் அந்த பெண்ணுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சோபியா தனது பேச்சுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டுமென தமிழிசை வலியுறுத்தினார். ஆனால் சோபியா மறுத்துவிட்டார்.
இதையடுத்து தமிழிசை அளித்த புகாரின் அடிப்படையில் சோபியாவை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். சோபியாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். சோபியாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சோபியா கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், அவரது கைது நடவடிக்கைக்கு எதிராகவும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டன. #பாசிச_பாஜக_ஆட்சி_ஒழிக, #சோபியா,#பாசிச_பாஜக_ஒழிக ஆகிய ஹேஷ்டேக்குகள் டிவிட்டரில் டிரெண்ட் ஆகின.
இந்தச் சூழலில், அவருக்கு இன்று ஜாமீன் வழங்கி தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.