கோவை: உக்கடம் பேருந்து நிலையத்தில் கூண்டிலிருந்து விழுந்து தவித்து வந்த சிட்டுக்குருவிகளை மீட்டு காவலர் ஒருவர் அன்பு செலுத்திய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை: உக்கடம் பேருந்து நிலையத்தில் கூண்டிலிருந்து விழுந்து தவித்து வந்த சிட்டுக்குருவிகளை மீட்டு காவலர் ஒருவர் அன்பு செலுத்திய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் உக்கடம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பேருந்து நிலையம் அருகே பணியில் இருந்தபோது பேருந்து நிலையத்தில் மேற்கூரையில் இருந்த குருவி குஞ்சு ஒன்று தரையில் விழுந்து கிடந்தது.
அதைக் கண்ட காகம் சிட்டுக்குருவியை தூக்கிச் செல்ல துரத்திக்கொண்டு வந்தது. அதைப் பார்த்த சிறப்பு உதவி ஆய்வாளர் அந்த சிட்டுக்குருவியை மீட்டு புறக்காவல் நிலையத்துக்குள் கொண்டு சென்று பாதுகாப்பாக வைத்தார். பின்னர் களைத்திருந்த குருவிக்குஞ்சுக்கு தண்ணீர் மற்றும் உணவு கொடுத்து தயார்படுத்தினார்.
பின்னர் தயாரான குருவிக்குஞ்சை மீண்டும் அதன் இருப்பிடத்திலேயே பாதுகாப்பாக வைத்தார். இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது.
இது குறித்து சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரசேகர் கூறுகையில், "சிட்டுக்குருவி இனம் அழிந்து வருகிறது. அதேபோல சிறு வயதில் அடிக்கடி இந்த சிட்டுக்குருவிகளை எங்கள் ஊரிலே பார்ப்பேன். ஆனால், தற்போது அதன் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆகவே அதை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் உள்ளது.
ஆகவே தான் அந்த சிட்டுக்குருவி கீழே விழுந்ததும் அதை மீட்டு அதற்கு உணவு கொடுத்து மீண்டும் அதன் இருப்பிடத்திலேயே வைத்தேன். அந்த நிகழ்வு எனக்கு மிகவும் மகிழ்ச்சியைக் கொடுத்தது." என்றார்.
அழிந்து வரும் இனப் பட்டியலில் உள்ள சிட்டுக்குருவியை மீட்க வேண்டும். அதன் எண்ணிக்கையைக் கூட்ட இயன்ற முயற்சி எல்லாம் செய்ய வேண்டும் என பல அமைப்புகள் சிட்டுக்குருவி இனத்தைக் காப்பாற்ற செயல்பட்டு வருகின்றனர். அதேபோல பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கு சிட்டுக்குருவி இனத்தை காப்பாற்ற வேண்டும் என்று பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் காவல்துறையை சேர்ந்த ஒருவர் தனது சிரமம் மிகுந்த பணியிலும் இந்த சிறு உயிருக்கும் நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் உதவியது இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து சிட்டுக்குருவி காப்பு இயக்கத்தின் நிறுவனர் பாண்டியராஜன் கூறுகையில், "சிட்டுக்குருவி இனங்களை அழிவுப்பாதையில் இருந்து மீட்க எங்கள் அமைப்பு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இது தொடர்பாக, பொதுமக்கள் மத்தியில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளோம்.
தற்போது, உக்கடம் பேருந்து நிலையத்தில் தவித்துக் கொண்டிருந்த சிட்டுக்குருவியை மீட்டு, அதற்கு மறுவாழ்வு அளித்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. வாயில்லா உயிருக்கு அன்பு காட்டிய உக்கடம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளருக்கு எங்கள் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்." என்றார்.
இப்படி பேருந்து நிலையத்தில் விழுந்து கிடந்த சிட்டுக்குருவியை மீட்டு காவல் துறையின் சிறப்பு உதவி ஆய்வாளர் பத்திரப்படுத்திய வீடியோவானது அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பாராட்டை பெற்றுள்ளது.