நீலகிரி: மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது நீலகிரி மாவட்டம். இந்த மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பச்சைக் கம்பளம் போற்றியது போல் தேயிலை தோட்டங்கள் அனைவரின் கண்களுக்கும் விருந்தளிக்கும். நீலகிரி மாவட்டத்தின் முக்கியமான பொருளாதாரமாக தேயிலை விவசாயம் திகழ்ந்து வருகிறது.
நீலகிரி: மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது நீலகிரி மாவட்டம். இந்த மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பச்சைக் கம்பளம் போற்றியது போல் தேயிலை தோட்டங்கள் அனைவரின் கண்களுக்கும் விருந்தளிக்கும். நீலகிரி மாவட்டத்தின் முக்கியமான பொருளாதாரமாக தேயிலை விவசாயம் திகழ்ந்து வருகிறது.

இந்த தேயிலை விவசாயத்தில் சுமார் 65 ஆயிரம் சிறு மற்றும் குறு விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு காரணங்களால் பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்காமல் தேயிலை விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், பல விவசாயிகள் தங்களது தேயிலை தோட்டங்களை விற்று விட்டு தங்களின் வாழ்வாதாரத்திற்காக சமவெளி பிரதேசங்களுக்கு இடம் பெயர்ந்து வரும் அவலம் நீலகிரி மாவட்டத்தில் சமீப காலமாக அரங்கேறி வருகிறது.
தொழிற்சாலைகள்
இந்த மாவட்டத்தில் 15 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 25 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இருந்து கொண்டு தங்களது தேயிலை தோட்டத்தில் பறிக்கும் பசுந்தேயிலையை அந்தந்த தொழிற்சாலைக்கு விநியோகித்து வருகின்றனர்.
பசுந்தேயிலைக்கு கடந்த பல ஆண்டுகளாக போதிய விலை இல்லாத போதும் மாற்றுத் தொழில் ஏதும் இங்கு இல்லாததால், கிடைக்கும் விலையைப் பெற்று தேயிலை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு விலை நிர்ணய குழுவை அமைத்து மாதந்தோறும் 10-ம் தேதிக்குள் குன்னூர் இங்கோ சர்வ் நிர்வாகத்தால் விலையை அறிவித்து வருகிறது. விலை நிர்ணயம் செய்த உடனே உறுப்பினர்களுக்கு அந்தந்த தொழிற்சாலை நிறுவனங்கள் மூலம் குறுஞ்செய்திகள் மூலம் விலை குறித்த பட்டியல் அனுப்பி வைக்கப்படுகின்றன.
விலை குறைப்பு
ஆனால் தேயிலை வாரியம் மூலம் கிலோவுக்கு 11.50 ரூபாய் என நிர்ணயம் செய்தாலும், விவசாயிகளுக்கு ரூ.2 முதல் 4 ரூபாய் வரை குறைத்தே தொழிற்சாலை நிர்வாகம் அளித்து வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் சுமார் 20 கோடி ரூபாய் வரை விவசாயிகளுக்கு அரசு கூட்டுறவு தொழிற்சாலைகள் நிலுவையில் வைத்துள்ளதாக விவசாயிகள் முக்கிய குற்றச்சாட்டாக முன் வைக்கின்றனர்.

மேலும், தற்போது வழங்கப்படும் விலை போதுமானதாக இல்லாததால் தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியம் கூட வழங்க முடியாமல் தவித்து வருவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
தொழிற்சாலை நிர்வாகம் மூலம் குறுஞ்செய்திகளாக அனுப்பப்படும் விலை தங்களுக்கு சரிவர கிடைக்காததால் இதுறித்து பல முறை மாவட்ட ஆட்சியரிடமும், தேயிலை வாரியத்திடமும் மனு அளித்தும் இது நாள் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று குற்றம்சாட்டும் விவசாயிகள், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியரை சந்திக்க இரண்டு முறை நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்திலும் அவரை சந்திக்க முடியாத நிலையில் கடந்த வாரம் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தை புறக்கணித்து வெளி நடப்பு செய்ததாக கூறுகின்றனர்.

எனவே, மாவட்ட நிர்வாகமும், தேயிலை வாரியமும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து தேயிலை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், நீலகிரி தேயிலை டீ தூளை சர்வதேச அளவிற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தேயிலை விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
