கோவை: உக்கடம்-பேரூர் பைபாஸ் சாலையை ஒட்டி அமைந்துள்ள பெரியகுளத்தின் கரைப் பகுதியில் பூங்கா, நடைபாதை மற்றும் மிதிவண்டி தளம் ஆகியவை அமைப்பதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
கோவை: உக்கடம்-பேரூர் பைபாஸ் சாலையை ஒட்டி அமைந்துள்ள பெரியகுளத்தின் கரைப் பகுதியில் பூங்கா, நடைபாதை மற்றும் மிதிவண்டி தளம் ஆகியவை அமைப்பதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளங்கள் புனரமைப்பு, மாதிரி சாலை, ஸ்மார்ட் ட்ரீ, மிதிவண்டி பகிர்தல் ஆகிய திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குளங்கள் புனரமைப்பு திட்டத்தின் முதற்கட்டமாக மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள எட்டு குளங்களில் ஒன்றான உக்கடம் பெரியகுளத்தின் ஆத்துப்பாலம் சாலையை ஒட்டிய குளக்கரை புனரமைக்கப்பட்டு புல்தரை, எல்.இ.டி விளக்குகள், கம்பி வேலி மற்றும் மிதிவண்டி சாலை ஆகியவை உருவாக்கப்பட்டன. தற்போது இந்த பகுதியில் உக்கடம் பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால் மிதிவண்டி சாலையில் வாகனங்களும் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து பெரியகுளத்தின் மற்றொரு பகுதியான பேரூர் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள குளக்கரையில் பசுமை பூங்கா, நடைபாதை, மிதிவண்டி தளம் ஆகியவை உருவாக்கத் திட்டம் தயாரிக்கப்பட்டு, முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "குளக்கரையின் மண் திட்டுகள் தற்போது சமன் செய்யப்பட்டு வருகின்றது. அடுத்தகட்டமாக சுமார் 4 கி.மீ தூரத்திற்கு பூங்கா மற்றும் மோட்டார் அல்லாத வாகனங்களை இயக்குவதற்கான பிரத்தியேக தளம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும்." என்றார்.
