கோவை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மக்களுக்காக ரூ.20 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களுடன் கோவையில் இருந்து கேரளா செல்கிறார் பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன்.
கோவை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மக்களுக்காக ரூ.20 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களுடன் கோவையில் இருந்து கேரளா செல்கிறார் பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன்.
கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் இருந்து பா.ஜ.க., சார்பில் தொடர்ந்து கேரளாவிற்கு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும், மருத்துவக் குழு ஒன்று கேரளாவிற்கு அனுப்பப்பட உள்ளது. இன்று பாலக்காட்டிற்கு சென்று பா.ஜ.க., சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட உள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு, கேரள மாநிலத்திற்கு பாரபட்சமில்லாமல் உதவுகின்றது. இதை சிலர் அரசியலாக்குகின்றனர்.

நீர் மேலாண்மைக்கான உள்நாட்டு, வெளிநாட்டு நிபுணர்களையும் அழைத்து விவாதம் நடத்தி தண்ணீரை சேமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு சொட்டு தண்ணீரைக் கூட வீணாக்கக் கூடாது.
தற்பொழுது மழை பெய்து வரும் சூழலில், தண்ணீரை சேமிக்க தமிழக அரசு ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக பா.ஜ.க.,வும் நீர் மேலாண்மை குறித்து அதிகாரிகளிடம் சில ஆலோசனைகளை கேட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசிடம் சில யோசனைகளை முன் வைக்கவுள்ளோம். இந்த மழை வெள்ளம் மூலம் கேரளா நமக்கு எச்சரிக்கை கொடுத்து இருக்கின்றது.
சென்னையில் தூர்வாரும் பணிகளை பொதுப்பணித்துறை, மாநகராட்சி ஆகியோர் மேற்கொண்டு வருகிறது. இதில் இருவருக்கும் இடையே யார் தூர்வாரும் பணிகளை மேற்கொள்வது என்ற குழுப்பம் இருக்கின்றது. இதை தமிழக அரசு தீர்க்க வேண்டும்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்த வேண்டும் கோரிக்கை வைத்ததை அவர்கள் ஏற்கவில்லை. இது உள்நோக்கம் கொண்டதாக தோன்றுகிறது. அங்கு நாகரீகம் இருந்திருக்க வேண்டும்.அவர்கள் அஞ்சலி செலுத்த வில்லை என்றால் எதுவும் நடத்துவிடப் போவதில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர், மதுக்கரை பகுதிக்குச் சென்ற அவர் அங்கு பா.ஜ.க., கட்சிக் கொடி கிழிக்கப்பட்டதை ஆய்வு செய்தார். மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு கட்சி சார்பில் சேகரிக்கப்பட்ட 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்களுடன் கேரளாவுக்கு செல்கிறார்.