மேட்டுப்பாளையம்: கேரள மாநிலத்தை கனமழை மற்றும் வெள்ளம் புரட்டிப் போட்டுள்ள நிலையில், மேட்டுப்பாளையம் மற்றும் கோவை பகுதிகளில் இருந்து அம்மாநிலத்திற்கு கொண்டு கொண்டு செல்லப்படும் காய்கறிகள் உள்ளிட்ட வர்த்தகம் முடங்கின.
மேட்டுப்பாளையம்: கேரள மாநிலத்தை கனமழை மற்றும் வெள்ளம் புரட்டிப் போட்டுள்ள நிலையில், மேட்டுப்பாளையம் மற்றும் கோவை பகுதிகளில் இருந்து அம்மாநிலத்திற்கு கொண்டு கொண்டு செல்லப்படும் காய்கறிகள் உள்ளிட்ட வர்த்தகம் முடங்கின.
கேரளாவில் கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெருமழை கொட்டியதால் அம்மாநிலத்தின் இயல்பு வாழ்க்கை ஒட்டுமொத்தமாக முடங்கியுள்ளது. மழை மற்றும் வெள்ள பாதிப்பிற்கு 350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், வீடுகளை இழந்த லட்சக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், சாலைகள் துண்டிக்கப்பட்டதால், போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பிற மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

வெள்ள பாதிப்பினால் கேரள மக்கள் துயரத்தில் ஆழ்ந்திருப்பதால், முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகையை அம்மாநில அரசு ரத்து செய்துள்ளது. இதனால், கோவையில் இருந்து ஓணப் பண்டிகைக்கான பொருட்கள் ஏதும் கேரள மாநிலத்திற்கு கொண்டு செல்லப்படவில்லை. எனவே, வர்த்தகம் பாதிக்கப்பட்டு, கோவை மற்றும் மேட்டுப்பாளையத்தில் உள்ள விவசாயிகள் கடுமையான இழப்பை சந்தித்துள்ளனர்.
இதனிடையே, கேரளக்காடுகளை முக்கிய நீர்பிடிப்பு பகுதியாகக் கொண்டுள்ள பில்லூர் அணை நிரம்பி வழிந்து வருகிறது. இதனால், அணையின் பாதுகாப்பு கருதி, அதன் நீர்வரத்து அப்படியே பவானியாற்றில் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக, பவானியாற்றின் கரையோர பகுதிகளான மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகையில் மட்டும் 9,000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பல லட்சம் வாழை மரங்கள் நீரில் மூழ்கின. இவையனைத்தும் ஓணம் பண்டிகைக்காக கேரளாவிற்கு அனுப்பி வைக்க அறுவடைக்கு தயாராக இருந்த வாழைகளாகும்.
வெள்ளபாதிப்பு மற்றும் ஓணம் பண்டிகை ரத்து போன்ற காரணங்களினால் கேரளாவை ஒட்டியுள்ள கோவையில் கடும் வர்த்தக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சமயத்தில் மேட்டுப்பாளையத்தில் இருந்து கேரளாவிற்கு தினசரி 300 லாரிகளில் டன் கணக்கில் கொண்டு செல்லப்படும் வாழைத்தார்கள் மற்றும் மலைக்காய்கறிகள் முற்றிலுமாக தடைபட்டுள்ளது. ஏற்கனவே, இங்கிருந்து சரக்கு ஏற்றி சென்ற லாரிகள் கேரளாவிற்குள் சிக்கி கொண்டதால் அம்மாநிலத்திற்கான சரக்கு போக்குவரத்து முடங்கியுள்ளது.
கோவை மாவட்டத்தின் மேட்டுப்பாளையம் மற்றும் இதர பகுதிகளில் இருந்து காய்கறிகள் மட்டுமின்றி பழங்கள், மலர்கள், துணிவகைகள் அதிகளவு கேரளாவிற்கு செல்லும் நிலையில், அங்கு நிலவும் அசாதாரண வெள்ள பாதிப்பு காரணமாக அனைத்து வர்த்தகமும் ஒட்டுமொத்தமாக முடங்கியுள்ளது.