நீலகிரி : மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு உதவும் வகையில், உதகை நகர வியாபாரிகள் சங்கம் சார்பில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான வெள்ள நிவாரணப் பொருட்கள் கேரளாவிற்கு எடுத்து செல்லப்பட்டது.
நீலகிரி : மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு உதவும் வகையில், உதகை நகர வியாபாரிகள் சங்கம் சார்பில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான வெள்ள நிவாரணப் பொருட்கள் கேரளாவிற்கு எடுத்து செல்லப்பட்டது.

கேரளாவில் பெய்து வரும் கனமழையால் இடுக்கி, வயநாடு, மலப்புரம், கோழிக்கோடு, கோட்டயம், பாலக்காடு, ஆலப்புழை உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. அங்குள்ள ஆறுகள், நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. மேலும், பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களில் மட்டும் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 320-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மீட்பு பணியில் ராணுவ வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால், அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதி அடைந்து வருகின்றனர். அவர்களுக்கு பல்வேறு தரப்பினர் உணவு, உடை, குடிநீர் உள்ளிட்டவற்றை கொடுத்து உதவி வருகின்றனர்.

இந்த நிலையில், கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, உதகை நகர வியாபாரிகள் சங்கம் சார்பில் அத்தியாவசிய பொருட்களான அரிசி, பிஸ்கட், பால், மலைக்காய்கறிகள், போர்வை, பாய், நாப்கின்கள், பிளாஸ்டிக் பக்கெட்டுகள், மருந்து, மாத்திரைகள், மளிகை பொருட்கள், துணிமணிகள், தண்ணீர் பாட்டில்கள், மெழுகுவர்த்தி போன்றவை திரட்டப்பட்டது. சுமார் ரூ. 10 லட்சம் மதிப்பிலான இந்த நிவாரணப் பொருட்களை, லாரிகளின் மூலம் உதகை நகராட்சி ஆணையாளர் ரவி (பொறுப்பு) தலைமையிலான குழுவினர் அனுப்பி வைத்தனர்.