கோவை: கோவையில் மது போதையில் போலீசாருடன் தகராறில் ஈடுபட்ட இளைஞரை 10 நாட்கள் காவல்துறையினருடன் இணைந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை: கோவையில் மது போதையில் போலீசாருடன் தகராறில் ஈடுபட்ட இளைஞரை 10 நாட்கள் காவல்துறையினருடன் இணைந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சுதர்சன் (28). இவர் கடந்த மாதம் 27-ம் தேதி மாலை தனது இருசக்கர வாகனத்தில் காந்திபுரம் ஆம்னி பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் சுதர்சனின் வாகனத்தை நிறுத்தி ஆய்வு செய்தனர்.
அப்போது, சுதர்சன் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, போக்குவரத்து விதிகளை மீறி குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்கான அபராதத்தைச் செலுத்திவிட்டு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

ஆனால், குடிபோதையில் இருந்த அவர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், பொது இடத்தில் வைத்து போலீசாரை தரக்குறைவாகவும், அச்சுறுத்தும் வகையிலும் பேசினார். இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இந்த சம்பவம் குறித்து போக்குவரத்து உதவி ஆய்வாளர் ரிச்சர்டு, சட்டம், ஒழுங்கு காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். பின்னர், வந்த ரத்தினபுரி போலீசார் குடிபோதையில் இருந்த சுதர்சனை கைது செய்து, அவர் மீது அரசு அலுவலரைப் பணி செய்யவிடாமல் தடுத்தல், ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை ஓட்டிச் செல்லுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையிலடைத்தனர்.

இதனைத் தொடர்ந்து சுதர்சன், தான் மது போதையில் காவல்துறையிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், பொதுமக்கள் கைதட்டியதால் உணர்ச்சிவசப்பட்டு விட்டதாகவும் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
இந்தநிலையில், நிபந்தனை ஜாமினில் வந்த அவரை, காலை 8:30 மணி முதல் மாலை 6 மணி வரை போலீசாருடன் இணைந்து போக்குவரத்தை சீர்படுத்தும் பணியில் ஈடுபட நீதிபதி ஞானசம்பந்தம் உத்தரவிட்டார். தற்போது சுதர்சன், காந்திபுரம் பகுதிகளில் போக்குவரத்தை சரி செய்து வருகிறார்.
மது போதையில் போலீசாரிடம் ரகளையில் ஈடுபட்ட இளைஞருக்கு கிடைத்துள்ள இந்த வித்தியாசமான தண்டனை ஆச்சரியம் கலந்த பாராட்டைப் பெற்றுள்ளது.