கோவை: 72-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் விஜயகார்த்திகேயன் தேசிய கொடியேற்றினார்.
கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஆணையாளர் மற்றும் துணை ஆணையாளர் தலைமையில் 72-வது சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

மாநகராட்சி வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தியடிகளின் சிலைக்கு கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் மற்றும் துணை ஆணையாளர் காந்திமதி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், விக்டோரிய ஹால் அருகே தேசிய கொடியை ஏற்றிவைத்து, நாட்டின் தேசிய கொடியை வணங்கி மரியாதை செலுத்தினார்.

அதனைத்தொடர்ந்து, மாநகராட்சியில் 25 ஆண்டு காலம் பணிபுரிந்த ஊழியர்களுக்கும், திடக்கழிவு மேலாண்மையில் சிறப்பாக பணியாற்றிய துப்புரவு மேற்பார்வையாளர்களுக்கும், சிறப்பாகப் பணியாற்றிய ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகளுக்கும் பாராட்டுச் சான்றிதழ்களையும், கேடயங்களையும் ஆணையாளர் விஜயகார்த்திகேயன் வழங்கினார்.

மேலும், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில் சிறப்பாகப் பணியாற்றிய சுகாதாரப் பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழுடன், மிதிவண்டியும் வழங்கப்பட்டது. பின்னர், மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
