கோவை: கோவை சரவணம்பட்டி அருகே காணாமல் போன 3 மாத பெண் குழந்தையை தாயே கொலை செய்திருக்கும் திடுக்கிடும் சம்பவம் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கோவை: கோவை சரவணம்பட்டி அருகே காணாமல் போன 3 மாத பெண் குழந்தையை தாயே கொலை செய்திருக்கும் திடுக்கிடும் சம்பவம் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சரவணம்பட்டியை அடுத்த சிவானந்தபுரத்தில் உள்ள 3-வது வீதியில் வசித்து வருபவர் கார்த்திக் (32). இவருக்கு கவிஸ்ரீ என்ற 3 மாத பெண் குழந்தை உள்ளது. இன்று மதியம் கார்த்திக் வீட்டில் உள்ள குளியலறையில் குளித்துக் கொண்டிருந்த போது, வீட்டினுள் புகுந்த மர்மநபர் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை கடத்திச் சென்றுள்ளார். மேலும், வீட்டில் இருப்பவர்களுக்கு சந்தேகம் வந்துவிடக் கூடாது என்பதற்காக குழந்தை இருப்பது போன்றே துணியை மூடிவைத்து சென்றுள்ளனர்.
மேலும், வீட்டில் இருந்த பீரோவில் இருந்து ரூ. 500-ஐயும் எடுத்துச் சென்றுள்ளனர். நீண்ட நேரம் குழந்தையிடம் இருந்து எந்தவித சத்தமும் இல்லாததால், சந்தேகம் அடைந்த தந்தை கார்த்திக், குழந்தை தூங்கி கொண்டிருந்த இடத்தில் உள்ள துணியை விலக்கிப் பார்த்துள்ளார். அப்போது, அங்கு குழந்தை இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர், சோதனை செய்ததில், வீட்டிற்குள் யாரோ மர்மநபர்கள் வந்தது போன்ற அடையாளங்கள் தென்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, குழந்தையின் பெற்றோர் சரவணம்பட்டி காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதனடிப்படையில், சரவணம்பட்டி போலீசார் குழந்தை கடத்தல் தொடர்பாக சி.சி.டி.வி., காட்சிகள் மற்றும் சந்தேகப்படும் நபர்கள் என பல நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், கார்த்திக்கின் வீட்டில் இருந்து சுமார் 250 மீட்டர் தொலைவில் துணியால் சுற்றப்பட்ட நிலையில், குழந்தையின் உடல் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். முதற்கட்டமாக போலீசார் குழந்தையின் பெற்றோரிடம் விசாணையை நடத்திய போது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததாகத் தெரிகிறது. இதனால், இந்தக் கொலை சம்பவத்தில் குழந்தையின் பெற்றோர்களுக்கு தொடர்பிருக்கிறதா...? அல்லது வேறு யாரேனும் குழந்தையைக் கடத்தி கொலை செய்துள்ளனரா..? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில், ஏற்கனவே பெண் குழந்தை இருந்த நிலையில், இரண்டாவது குழந்தையும் பெண்ணாக பிறந்ததால் அவரது தாய் வனிதாவே கொலை செய்தது தெரிய வந்துள்ளது. குழந்தையை தானே கொலை செய்ததை ஒப்புக்கொண்ட தாய் வனிதா, முதல் குழந்தை பெண்ணாக இருந்ததால் இரண்டாவது ஆண் குழந்தை பிறக்கும் என நினைத்திருந்ததாகவும், ஆனால் இரண்டாவதும் பெண்ணாக பிறந்ததால் குடும்பத்தினர் மத்தியில் தான் ஒதுக்கி வைக்கப்பட்டு விடுவோம் என எண்ணியதாக கூறியுள்ளார்.
மேலும், மூன்று மாத குழந்தை எப்போதும் அழுது கொண்டிருந்ததாகவும், இதனால் தான் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியதால் குழந்தையை கொன்று வீட்டின் பின்புறம் குழந்தையை கொன்று வீசி விட்டதாக தெரிவித்தார். இதைத் தொடர்ந்து வனிதாவிடம் விசாரணை நடத்தி வரும் போலிசார் அவரை எந்த நேரமும் கைது செய்யலாம்.