விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 10 அடிக்கு மேல் சிலை வைக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 10 அடிக்கு மேல் சிலை வைக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.
விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் 13-ம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், விநாயகர் சிலைகளை வைப்பதற்கும், சிலைகளைக் கரைப்பதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள
அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
சிலை வைக்கப்படும் இடத்தின் உரிமையாளர், தீயணைப்புத்துறை மற்றும் மீட்பு படையினரின் தடையில்லா சான்றுகளுடன் ஒரு மாதத்திற்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டும். அத்துடன், காவல் துறை உதவி ஆணையர், கோட்டாட்சியர் அல்லது மாவட்ட துணை ஆட்சியரிடம் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும்.
மேலும், விநாயகர் சிலை வைக்கப்படும் இடத்திற்கு எங்கிருந்து மின் இணைப்பு பெறுவது மற்றும் அதற்கான உரிய ஆதாரம் குறித்து மின் வாரியத்திடம் கடிதம் பெறுவது அவசியம். குறிப்பாக, விநாயகர் சிலைகள் சுத்தமான களிமண் கொண்டு மட்டுமே செய்ய வேண்டும். வேதியியல் பொருட்கள் மற்றும் சுகாதார சீர்கேடு விளைவிக்கும் சாயப் பொருட்களை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
10 அடி உயரத்திற்கு மேல் சிலைகள் நிறுவப்படக் கூடாது. அரசியல் கட்சிகள், சாதி, மத ரீதியிலான தலைவர்களை ஆதரிக்கும் வகையில் அடங்கிய பதாகைகள் வைக்கக் கூடாது. குறிப்பாக, பொது இடத்தில் 5 நாட்களுக்கு மேல் சிலைகள் வைக்கக்கூடாது என்பதுடன், வானவேடிக்கை நிகழ்த்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி முடிந்த பின்னர், பூ மற்றும் அலங்கார பொருட்களை அகற்றிய பின்னரே சிலைகளை எடுத்துச் செல்ல வேண்டும், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.