கேரளா : தொடர் கனமழையின் காரணமாக வெள்ளத்தில் மிதக்கும் கேரளாவிற்கு நிதியுதவி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ள முதலமைச்சர் முதலமைச்சர் பினராயி விஜயன், தனது வங்கிக் கணக்கை வெளியிட்டுள்ளார்.
கேரளா : தொடர் கனமழையின் காரணமாக வெள்ளத்தில் மிதக்கும் கேரளாவிற்கு நிதியுதவி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ள முதலமைச்சர் முதலமைச்சர் பினராயி விஜயன், தனது வங்கிக் கணக்கை வெளியிட்டுள்ளார்.

கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் தென்மேற்கு பருவமழையினால், கேரள மாநிலத்தின் பெரும் பகுதி வெள்ளத்தில் மிதக்கிறது. வயநாடு, கோழிக்கோடு உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு மாநில தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. தேசிய கடலோர தகவல் சேவை மையமும், கேரளாவில் 15 ஆம் தேதி வரை கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.

மழை ஒருபுறம் பெய்து கொண்டிருக்க, பெரும்பாலான அணைகள் ஒரே சமயத்தில் திறக்கப்பட்டதால், 8 மாவட்டங்கள் கடலுக்குள் மூழ்கியது போல, தண்ணீர் தேங்கியுள்ளது. கனமழை, வெள்ள பாதிப்புகளால் பலியானோர் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 54 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். முப்படையும் சேர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. 32 ராணுவ விமானங்கள், 5 ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

ஆலப்புழா, எர்ணாகுளம், கோட்டயம், மலப்புரம், கோழிக்கோடு மற்றும் பாலக்காடு பகுதிகளுக்கு வரும் 13ஆம் தேதி வரை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முதலமைச்சர் பினராயி விஜயன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, காங்கிரசைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலாவுடன் சேர்ந்து ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில், நிதியுதவி வழங்க விரும்புவோருக்காக தனது வங்கிக் கணக்கையும் (67319948232, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, திருவனந்தபுரம் கிளை, ஐ,எப்.எஸ்.சி. எண் : SBIN0070028) அவர் வெளியிட்டுள்ளார். உதவ நினைப்பவர்கள் மேற்கண்ட வங்கிக் கணக்கிற்கு பணத்தை செலுத்தலாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வெள்ளப்பாதிப்பைப் பார்வையிடுவதற்காக உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நாளை (ஆக.,12) கேரளா வருகிறார். கேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என பிரதமர் மோடி, முதலமைச்சர் பினராயி விஜயனிடம் உறுதியளித்துள்ளார். இதுவரை கேரளாவிற்கு தமிழகம் ரூ. 5 கோடியும், கர்நாடகா ரூ. 10 கோடியும், புதுச்சேரி ரூ.1 கோடியும் நிதியுதவியாக அறிவித்துள்ளன.
இதனை தொடர்ந்து கேரளாவில் கனமழை, வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவியும் ,வெள்ளத்தால் வீடுகள், விளை நிலங்களை இழந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்