கேரளா: ஆசியாவில் உள்ள பெரிய வளைவு அணைகளில் ஒன்றான கேரள மாநிலம் இடுக்கி அணையில் இருந்து 26 ஆண்டுகளுக்குப் பிறகு நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
கேரளா: ஆசியாவில் உள்ள பெரிய வளைவு அணைகளில் ஒன்றான கேரள மாநிலம் இடுக்கி அணையில் இருந்து 26 ஆண்டுகளுக்குப் பிறகு நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள இடுக்கி அணை கடல் மட்டத்தில் இருந்து 2,403 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இடுக்கி அணை குறவன் மலை மற்றும் குறத்தி மலை ஆகிய இரு அணைகளையும் இணைத்து ஒரு அரைவட்டம் போன்று பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே கட்டப்பட்ட வளைவு அணைகளில் இடுக்கி அணை மிகப்பெரியதாகும்.

தற்போது, கேரளாவில் பலத்த மழை பெய்து வருவதால் இந்த அணையின் நீர் மட்டம் முழுக் கொள்ளளவை எட்டியது. இதனால், கடந்த ஜுலை 30-ம் தேதி வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, முப்படைகளும் உஷார் நிலையில் இருக்குமாறு அறிவுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இன்று காலை இந்த அணையின் நீர்மட்டம் 2398.98 அடியை எட்டியது. இதையடுத்து அணையின் மதகுகள் இன்று மதியம் திறக்கப்பட்டது. முதற்கட்டமாக அணையில் இருந்து வினாடிக்கு 50 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுவதை அடுத்து அணை பகுதியில் வசிக்கும் கரையோர மக்களுக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணையை விட 7 மடங்கு பெரியதான இடுக்கு அணையை 1976-ம் ஆண்டு பிப்ரவரி 12-ம் தேதி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அணை 170 மீட்டர் உயரமும் 366 மீட்டர் நீளமும் கொண்டது.