பெங்களூர்: மே 17 இயக்கத்தின் நிறுவனர் திருமுருகன் காந்தியை பெங்களூர் விமான நிலையத்தில் போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
பெங்களூர்: மே 17 இயக்கத்தின் நிறுவனர் திருமுருகன் காந்தியை பெங்களூர் விமான நிலையத்தில் போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
இதுதொடர்பாக மே பதினேழு இயக்கம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் திருமுருகன் காந்தி பதிவு செய்துவிட்டு திரும்பிய போது, பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டுள்ளார். வரும் ஞாயிறு அன்று பெங்களூரில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காரணத்தினால் பெங்களூர் விமான நிலையத்தில் இன்று காலை வந்து இறங்கினார்.

இந்நிலையில் தூத்துக்குடி படுகொலையை ஐ.நாவில் பேசியதற்காக பழைய போராட்ட வழக்குகளை காரணம் காட்டி திருமுருகன் காந்தி பெங்களூரில் கைது செய்யப்பட்டுள்ளார். பா.ஜ.க., அரசு மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அரசின் இந்த அடக்கு முறையினை வன்மையாகக் கண்டிப்போம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், விடுதலை புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி ஜெர்மனியில் உரையாற்றிய திருமுருகன் காந்தி, ஐ.நாவில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு மற்றும் 8 வழிச்சாலை விவகாரங்கள் குறித்து பேசியதாகவும் தெரிகிறது. அவர் மீது தேச துரோக வழக்கு நிலுவையில் உள்ளதால், அவர் எந்த விமான நிலையம் வந்தாலும் கைது செய்யும் படி லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதாக திருமுருகன் காந்தியைக் கைது செய்த போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் திருமுருகன் காந்தியின் கைது குறித்து தமிழக போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.