திருப்பூர்: பல்வேறு சர்ச்சைகள் மற்றும் எதிர்ப்புகளையும் மீறி மீண்டும் சமையலராகப் பணியில் அமர்த்தப்பட்ட பாப்பாள் சமைத்த உணவை உண்ட குழந்தைகளுக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருப்பூர்: பல்வேறு சர்ச்சைகள் மற்றும் எதிர்ப்புகளையும் மீறி மீண்டும் சமையலராகப் பணியில் அமர்த்தப்பட்ட பாப்பாள் சமைத்த உணவை உண்ட குழந்தைகளுக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் திருமலைக் கவுண்டம்பாளையம் அரசுப் பள்ளியில், சத்துணவு சமையலராகப் பணிமாறுதல் பெற்று வந்தார் பட்டியலின் சமூகத்தைச் சேர்ந்த பாப்பாள். அவர் அங்கு சமைக்கக்கூடாது என்று கூறி மாணவர்களின் பெற்றோர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தும் பள்ளிக்கூடத்தைப் பூட்டியும் அராஜகத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக காவல்துறையில் புகார் அளித்திருந்தார் பாப்பாள். அதன் அடிப்படையில், சமையலர் பாப்பாளை சாதியின் பெயரைச் சொல்லி திட்டியதாகவும் பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் அப்பகுதியைச் சேர்ந்த 89 பேர் மீது காவல்துறையினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில், தற்போது வரை எட்டு பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது அதே பள்ளியில் தொடர்ந்து பணிபுரிந்துவருகிறார் பாப்பாள். இதனால், தங்களது குடும்பத்துக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக, மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருந்தார் அவரது கணவர்.
இந்நிலையில், நேற்று மதியம் வழக்கம்போல அப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு சத்துணவு பரிமாறப்பட்டது. அப்போது, ஒரு மாணவியின் சாப்பாட்டுத் தட்டில் இறந்துபோன பல்லி ஒன்று கிடந்ததாகத் தகவல் பரவியது. இதையடுத்து, பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட குழந்தைகள் அனைவரையும் அவசரம் அவசரமாக அவிநாசி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றுள்ளனர். அங்கு, 11 மாணவிகள் மற்றும் 1 மாணவர் உட்பட மொத்தம் 12 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
தற்போது நால்வருக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், மற்றவர்கள் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர்.
இந்த நிலையில், தன்னை பள்ளியில் இருந்து அனுப்ப சதி நடப்பதாக பாப்பாள் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-
வழக்கம் போலவே நேற்றும் பள்ளியில் உதவி சமையலருடன் சமைத்து முடித்தேன். உணவை மாணவர்களுக்கு கொடுப்பதற்கு முன்னதாக நான் சாப்பிட்டேன். அதற்கான மாதிரியையும் எடுத்து வைத்துள்ளேன். எனது குழந்தைகளும் இதே பள்ளியில் தான் படிக்கின்றனர். எப்போதும், பள்ளியின் தலைமையாசிரியர் அறையின் அருகிலுள்ள ஓர் அறையில் தான் சமைப்போம்.
மதிய உணவுக்கான மணி அடித்த பிறகு மாணவர்களுக்கு உணவு பரிமாறப்படும். அதுவரை நாங்கள் அந்த அறையின் வெளியில் காத்திருப்போம். எனக்கு ஒரு சந்தேகம் எழுந்துள்ளது. நாங்கள் வெளியே சென்ற அந்த நேரத்தில் சிலர் அங்கு சென்று இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம். குழந்தைகளை நினைத்து நான் மிகுந்த கவலை கொண்டேன். தற்போது அவர்கள் அனைவரும் நலமுடன் இருப்பதை அறிந்த பிறகே நிம்மதி கிடைத்தது. அதே நேரத்தில், நான் சமையல் பணி செய்யும் பொது கவனக்குறைவாக செயல்படவில்லை என்பது நூறு சதவீதம் உண்மை." என்றார்.

பல்லி விழுந்ததாகப் புகார் கூறிய மாணவி, பாப்பாள் தொடர்பான விவகாரம் தொடங்கியது முதல் பள்ளியில் உணவு உண்பதை நிறுத்தியுள்ளார். இந்த நிலையில் நேற்று தான் மீண்டும் அவர் உணவு சாப்பிட வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தி, அவினாசி துணை கண்காணிப்பாளர் பரமசாமி, வட்டார வளர்ச்சித்துறை அதிகாரி பிரபாகரன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். ஆய்வின் போது உணவு தட்டில் பள்ளி இருந்ததாக அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சசிகலா கூறினார். மேலும், இது பாப்பாளின் கவனக்குறைவால் தான் ஏற்பட்டதாகக் குற்றம் சாட்டினார்.
இதனைத் தொடர்ந்து, உணவு பாதுகாப்புத்துறை மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் உணவு மாதிரியைப் பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர். இது குறித்து மாவட்ட வருவாய்த் துறை அலுவலர் பிரசன்னா ராமசாமி கூறுகையில், "இது தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது. பரிசோதனைக்காகக் கொண்டு செல்லப்பட்ட உணவு மாதிரியின் முடிவுகள் வந்த பிறகு அடுத்து என்ன செய்யலாம் என்பது குறித்து முடிவு செய்யப்படும்." என்றார்.
இதனிடையே, பள்ளியின் தலைமை ஆசிரியை சசிகலா அளித்த புகாரின் பேரில், ஐ.பி.சி. 337 கீழ் காயம் விளைவித்தல், மனித உயிர்களுக்கு தீங்கு விளைவித்தல் மற்றும் அலட்சியமாக செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளில் பாப்பாள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து, வன்முறை ஏதும் ஏற்படாமல் இருக்க திருமலைகவுண்டம்பாளையம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.