ஒரே ஒருமுறையாவது 'அப்பா' என அழைத்துக்கொள்ளட்டுமா.. தலைவரே..? என உடல்நலக்குறைவால் உயிரிழந்த தி.மு.க., தலைவரும், தந்தையுமான கருணாநிதிக்கு ஸ்டாலின் உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்.
ஒரே ஒருமுறையாவது 'அப்பா' என அழைத்துக்கொள்ளட்டுமா.. தலைவரே..? என உடல்நலக்குறைவால் உயிரிழந்த தி.மு.க., தலைவரும், தந்தையுமான கருணாநிதிக்கு ஸ்டாலின் உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக டுவிட்டரில் அவர் கைப்பட எழுதிய கவிதை வடிவிலான கடிதத்தில் கூறியிருப்பதாவது :- எங்கு சென்றாலும் சொல்லிவிட்டு செல்லும் எனது ஆருயிர் தலைவரே..!, இம்முறை ஏன் சொல்லாமல் சென்றீர்கள்..?, என் உணர்வில், உடலில், சித்தத்தில், சிந்தனையில், இதயத்தில், இரண்டறக் கலந்துவிட்ட தலைவா..!. எங்களையெல்லாம் இங்கேயே ஏங்கவிட்டு எங்கே சென்றீர்கள்..?
"ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான் என்று நினைவிடத்தில் எழுத வேண்டும் என்று 33 ஆண்டுகளுக்கு முன்பே எழுதினீர்கள். இந்த தமிழ் சமூகத்துக்காக இடையறாது உழைத்தது போதும் என்ற மனநிறைவுடன் புறப்பட்டு விட்டீர்களா..?
95 வயதில் 80 ஆண்டு பொதுவாழ்வுடன் சளைக்காமல் ஓடி, நாம் தாண்டிய உயரத்தை யார் தாண்டுவார்கள் பார்ப்போம் என்று போட்டி வைத்துவிட்டு மறைந்து காத்திருக்கிறீர்களா..?
திருவாரூர் மண்ணில் உங்கள் 95-வது பிறந்த நாளான ஜுன் 03-ம் நாள் நான் பேசும் போது, 'உங்கள் சக்தியில் பாதியைத் தாருங்கள் என்றேன்,' அந்த சக்தியையும் பேரறிஞர் அண்ணாவிடம் நீங்கள் இரவலாகப் பெற்ற இதயத்தையும் யாசிக்கிறேன்.
தருவீர்களா தலைவரே..!
அந்தக் கொடையோடு, இன்னும் நிறைவேறாத உங்கள் கனவுகளையும், இலட்சியங்களையும் வென்று காட்டுவோம்..!
கோடான கோடி உடன்பிறப்புகளின் இதயத்தில் இருந்து ஒரு வேண்டுகோள்..... ஒரே ஒரு முறை....."என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புகளே..!" என்று சொல்லுங்கள் தலைவரே..!. அது ஒரு நூறாண்டு எங்களை இனமொழி உணர்வோடு இயங்க வைத்திடுமே..!,
"அப்பா அப்பா" என்பதை விட "தலைவரே தலைவரே" என நான் உச்சரித்ததுதான் என் வாழ்நாளில் அதிகம். அதனால், ஒரே ஒருமுறை, இப்போது 'அப்பா' என்று அழைத்துக் கொல்லட்டுமா தலைவரே...?
கண்ணீருடன்
மு.க.,ஸ்டாலின்
இவ்வாறு அந்தக் கடிதத்தில் உருக்கமாக ஸ்டாலின் எழுதியிருந்தார்.

