கோவை: உடல்நலக்குறைவால் காலமான தி.மு.க., தலைவர் கருணாநிதியின் திருவுருப்படத்திற்கு கோவை மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.
கோவை: உடல்நலக்குறைவால் காலமான தி.மு.க., தலைவர் கருணாநிதியின் திருவுருப்படத்திற்கு கோவை மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 11 நாட்களாகக் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க., தலைவர் கருணாநிதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், மாநிலம் முழுவதும் உள்ள தி.மு.க., நிர்வாகிகள் சென்னைக்கு விரைந்த வண்ணம் உள்ளனர். இதனால், சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனிடையே, தமிழகம் முழுவதும் கருணாநிதியின் மறைவிற்கு தி.மு.க., தொண்டர்கள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், கட்சியின் அலுவலகங்களில் உள்ள கட்சிக் கொடிக் கம்பத்தில் கொடிகள் அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டம் வடகோவையில் உள்ள தி.மு.க., அலுவலகத்தில் கருணாநிதியின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து தி.மு.க., தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். பெரும்பாலான நிர்வாகிகள் கருணாநிதிக்கு நேரில் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னைக்கு சென்றிருப்பதால், கோவை மாவட்ட தி.மு.க., அலுவலகம் வெறிச்சோடியே காணப்பட்டது.

இதனிடையே, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மறைவு தொடர்பான செய்தியை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த கோவை மாவட்ட பொள்ளாச்சி வடக்கு மத்திய ஒன்றியம் குள்ளக்பாளையம் பகுதியைச் சேர்ந்த உறுப்பினர் கனகராஜ் என்பவர் மாரடைப்பால் மரணமடைந்தார்.