கோவை: கோவை குட்கா ஆலை வழக்கில் ஜாமீன்தாரர்கள் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகியதால், உரிமையாளர் அமீத் ஜெயின் உள்பட 4 பேர் நிபந்தனை ஜாமீனில் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.
கோவை: கோவை குட்கா ஆலை வழக்கில் ஜாமீன்தாரர்கள் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகியதால், உரிமையாளர் அமீத் ஜெயின் உள்பட 4 பேர் நிபந்தனை ஜாமீனில் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.
கோவையில் சட்டவிரோதமாக செயல்பட்ட குட்கா ஆலை வழக்கில் தேடப்பட்டு வந்த ஆலையின் உரிமையாளர் அமீத் ஜெயின் உட்பட 4 பேர் உயர்நீதிமன்றத்தில் நிபந்தனை முன் ஜாமீன் பெற்றனர். இதையடுத்து, அவர்கள் 4 பேரின் சார்பில் ஜாமின்தாரர்கள் கோவை சூலூர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
டெல்லியைச் சேர்ந்த ஆலை உரிமையாளரான அமீத் ஜெயின் சார்பில் இருவர் தலா ரூ. 2 லட்சத்திற்கும், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை வாகன போக்குவரத்து செய்த கோவையைச் சேர்ந்த வடிவேல் என்பவர் சார்பில் இருவர் தலா ரூ. 10,000-க்கும், புகையிலைப் பொருட்களை வாங்கி விற்பனை செய்த மதுரையைச் சேர்ந்த பிரவீன், ஸ்ரீனிவாச பெருமாள் ஆகிய இருவர் சார்பில் இருவர் தலா ரூ. 25,000-க்கும் ஜாமீன்தாரர்கள் கோவை சூலூர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
அப்போது, 4 பேரும் இரண்டு வாரத்திற்கு கோவை சூலூர் காவல் நிலையத்தில் காலை, மாலை என இரு நேரங்களில் கையெழுத்திட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
கோவை மாவட்டம் கண்ணம்பாளையம் பகுதியில் குட்கா தயாரிப்பு தொழிற்சாலை சட்ட விரோதமாக இயங்கி வந்ததை கடந்த ஏப்ரல் மாதம் 27-ம் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். சட்டவிரோத ஆலையை நடத்தி வந்ததாகக் கைது செய்யப்பட்ட குட்கா ஆலை உரிமையாளர் உட்பட 4 பேர் கடந்த மாதம் 18-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் நிபந்தனை முன் ஜாமீன் பெற்றனர்.