நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தின் மையப் பகுதியானது 321 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது. இங்கு 100–க்கும் மேற்பட்ட புலிகள், 80–க்கும் மேற்பட்ட சிறுத்தைகள் உள்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தின் மையப் பகுதியானது 321 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது. இங்கு 100–க்கும் மேற்பட்ட புலிகள், 80–க்கும் மேற்பட்ட சிறுத்தைகள் உள்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன.
புலிகளின் எண்ணிக்கை ஆண்டிற்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இதையொட்டி புலிகளின் நலனைக் கருத்தில் கொண்டு தேசிய புலிகள் ஆணைய விதிமுறைப்படி காப்பக மையப் பகுதியில் உள்ள பென்னை, நெல்லிகரை, புளியாளம், மண்டகரை, நாகம்பள்ளி, முதுகுழி, குண்டித்தல் ஆகிய 7 கிராம பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்களை வெளியேற்றி மறு குடியமர்த்தும் பணி நடைபெற்று வருகிறது.
'கோல்டேன் சேக்' என்ற திட்டத்தின் கீழ் இந்த பணி நடைபெறுகிறது. அதாவது புலிகள் காப்பகத்தின் மையப் பகுதியில் வீடுகளைக் கட்டி, விவசாயம் செய்து வரும் மக்களை அங்கிருந்து வெளியேற்றும்போது, அவர்கள் வைத்திருக்கும் விவசாய நிலத்திற்கு இணையான நிலத்தை புலிகள் காப்பகத்தின் வெளியே வனத்துறை சார்பில் வழங்கி வீடு கட்டி தரப்படும் அல்லது அதற்கு இணையாக இழப்பீடு வழங்கப்படும்.
அதன்படி மொத்தம் இருந்த 701 குடும்பங்களில் முதற்கட்டமாக 235 குடும்பங்கள் முதுமலை புலிகள் காப்பகத்தின் மையப் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டு மறு குடியமர்த்தப்பட்டனர். அதனை தொடர்ந்து மீதமுள்ள மக்களை வெளியேற்ற போதிய நிதி கிடைக்காததால், அத்திட்டத்தை செயல்படுத்துவதில் தடை ஏற்பட்டது.
இந்த நிலையில், தற்போது 2–ம் கட்டமாக 255 குடும்பங்களை வெளியேற்றி மறு குடியமர்த்த தேவையான ரூ.25½ கோடி நிதியை மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கி உள்ளன. இதைத்தொடர்ந்து 255 குடும்பங்களை மறு குடியமர்த்த தேவையான நடவடிக்கைகளை முதுமலை புலிகள் காப்பக நிர்வாகம் தற்போது மேற்கொண்டு வருகிறது.
இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் உலகநாதன் கூறுகையில், "2–ம் கட்ட மறு குடியமர்த்தும் பணிக்காக ரூ.25½ கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் மாற்று நிலம் கேட்டுள்ள 68 குடும்பங்களுக்கு அய்யங்கொல்லியில் நிலம் வழங்கப்படும். இழப்பீடு கேட்டுள்ள 187 குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் வழங்கப்படும்." என்றார்.
