கோவை: சுந்தராபுரம் அருகே 6 பேரை பலி கொண்ட சம்பவத்திற்கு காரணமான கார் ஓட்டுநர் மது போதையில் இருந்ததாக ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அவர் மீது கூடுதலாக 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை: சுந்தராபுரம் அருகே 6 பேரை பலி கொண்ட சம்பவத்திற்கு காரணமான கார் ஓட்டுநர் மது போதையில் இருந்ததாக ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அவர் மீது கூடுதலாக 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுந்தராபுரம் பகுதியில் நேற்று அதிவேகமாக சென்ற சொகுசு கார் ஒன்று சாலையோரம் நின்றிருந்த பொதுமக்கள் மீது மோதியது. இந்த விபத்தில் நான்கு பெண்கள் உட்பட ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், மூன்று பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், அந்த காரின் ஓட்டுனர் ஜெகதீஸ் குமாரை பிடித்த போலீசார் அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர். மேலும், வாகனம் ஓட்டிய போது அவர் மது போதையில் இருந்தாரா? என்பதை சோதிக்க அவரது ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டது.
பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில், தான் மது போதையில் வாகனம் ஓட்டியதாக ஜெகதீஸ் குமார் ஒப்புதல் அளித்துள்ளார். வாகனம் ஓட்டும்போது மது அருந்தியதாக அரசு மருத்துவர் முன்னிலையில் ஓட்டுனர் ஜெகதீஷ்குமார் ஒப்புக்கொண்ட சான்றிதழ் காவல் துறையினரால் பெறப்பட்டுள்ளது. கூடுதலாக ரத்த மாதிரி பரிசோதனை அறிக்கைக்காகக் காத்திருக்கும் போலீசார் அதைப் பெற்று, நீதிமன்றத்தில் அறிக்கையாக சமர்ப்பிக்க உள்ளனர்.
கார் ஓட்டுநர் ஜெகதஸ் மீது ஏற்கனவே 279, 337, 338, 304 (2) ஐ.பி.சி., என 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில், கூடுதலாக மோட்டார் வாகன சட்டப்பிரிவுகளான 183, 184, 185 ஆகிய மூன்று பிரிவுகள் இணைக்கப்பட்டுள்ளது. இதில், 185 என்பது மது அருந்தி அல்லது போதையினால் வாகனத்தை இயக்கியது என்ற பிரிவாகும்.
இதனிடையே, விபத்து நடந்த இடத்தில் எச்சரிக்கை பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு அதிவேகமாக பயணிப்பவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.