கோவை: கோவையில் அதிவேகமாக வந்த சொகுசு கார் பேருந்திற்காக காத்திருந்த பயணிகள் கூட்டத்திற்குள் புகுந்ததில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 1 லட்சம் நிவாரணமாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
கோவை: கோவையில் அதிவேகமாக வந்த சொகுசு கார் பேருந்திற்காக காத்திருந்த பயணிகள் கூட்டத்திற்குள் புகுந்ததில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 1 லட்சம் நிவாரணமாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
கோவை - பொள்ளாச்சி சாலையில் சுந்தராபுரம் அருகே நேற்று ரத்தினம் என்ஜினீயரிங் கல்லூரி நிர்வாகத்திற்குச் சொந்தமான சொகுசு கார் கோவையை நோக்கி அதிவேகமாக வந்தது. இந்த கார் திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்த பயணிகள் கூட்டத்துக்குள் புகுந்தது. இந்தக் கோர விபத்தில் கல்லூரி மாணவி உள்பட 6 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில், கோவையில் நிகழ்ந்த இந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை சுந்தராபுரம் பகுதியில் நிகழ்ந்த இந்த சாலை விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 3 பயணிகள் மற்றும் சாலையோரம் நின்றிருந்த கல்லூரி மாணவி உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன். இந்த விபத்தில் உயிரிழந்த 6 நபர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபவத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
விபத்தில் காயமடைந்த 3 நபர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கும், மருத்துவமனை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளேன். உயிரிழந்த 6 நபர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 1 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000, சாதாரண காயமடைந்தவர்களுக்கு ரூ. 25,000-ம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.