கோவை: கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு துண்டு துண்டாக வெட்டப்பட்டு வீசப்பட்ட நிலையில் பெண்ணின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அதே பெண்ணின் கால்கள் செல்வாம்பதி குளத்தில் இருந்து போலீசார் கண்டெடுத்துள்ளனர்.
கோவை: கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு துண்டு துண்டாக வெட்டப்பட்டு வீசப்பட்ட நிலையில் பெண்ணின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அதே பெண்ணின் கால்கள் செல்வாம்பதி குளத்தில் இருந்து போலீசார் கண்டெடுத்துள்ளனர்.
கோவை பனமரத்தூர் அருகே உள்ள செல்வாம்பதி குளம் சுமார் 20 ஏக்கர் பரப்பளவு கொண்டது. தென்மேற்கு பருவ மழையின் காரணமாக குளம் முழுவதும் நிறைந்துள்ளது. இந்நிலையில் குளத்தின் ஓரத்தில் கடந்த மாதம் 25-ம் தேதி தலை, கைகள் மற்றும் வயிற்றின் கீழ் பகுதிகள் வெட்டப்பட்டு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் உடல் கிடப்பதாக செல்வபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தொடர்ந்து, அங்கு சென்ற போலீசார், நீரில் துண்டு துண்டாக மிதந்த பெண்ணின் உடல் பாகங்களை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அந்த உடலின் கால் பகுதிகள் மட்டும் கிடைக்காமல் இருந்தது.
இந்தநிலையில், அவற்றை மீனவர்கள் உதவியுடன் போலீசார் தேடிவந்த நிலையில் நேற்று குளத்தில் கிடந்த மற்றொரு மூட்டையில் இருந்து இரு கால்கள் மீட்கப்பட்டது.
பின்னர் அந்த கால்கள், கோவை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பப்பட்டது. இந்நிலையில், கொலை செய்யப்பட்ட பெண் யார்? எந்த ஊரைச் சார்ந்தவர்? யார் அவரை கொலை செய்தது? என்பது குறித்து செல்வபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இறந்த பெண்ணின் காலில் இருந்த வளையங்கள் வடமாநில பெண்கள் அணியும் வகையிலானது என்பதால் கொலை செய்யப்பட்டு இறந்த பெண் வடமாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.