நீலகிரி: உதகை - மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்பட்டு வரும் மலை ரயிலின் டிக்கெட் கட்டணம் வரும் அக்டோபர் மாதம் 8-ம் தேதி முதல் உயர்த்தப்படுகிறது.
நீலகிரி: உதகை - மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்பட்டு வரும் மலை ரயிலின் டிக்கெட் கட்டணம் வரும் அக்டோபர் மாதம் 8-ம் தேதி முதல் உயர்த்தப்படுகிறது.
மலை ரயிலின் தோற்றம்:
இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆண்டபோது நீலகிரியின் காலநிலை அவர்களது நாட்டை ஒத்திருந்ததால், அதிகளவிலான ஆங்கிலேயர்கள் இங்கு குடியேறினார்கள். அப்போது, ஆங்கிலேயர்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை கொண்டு வருவதற்கு வாகன உதவி தேவைப்பட்டது. இதற்காக ஆங்கிலேயர்கள் மலை ரயிலை தேர்வு செய்தனர். இதற்காக மலை ரயில் பாதையை அமைக்க 1885-ம் ஆண்டு நீலகிரி மலை ரயில்வே கம்பெனி தொடங்கப்பட்டது. இந்த கம்பெனிக்கு ராபர்ட் மில்லர் என்பவர் தலைவராக செயல்பட்டார்.
அப்போது, ரூ. 25 லட்சம் முதலீட்டில் 1891ம் ஆண்டு அப்போதைய சென்னை கவர்னர் லார்டு வென்லாப் என்பவர் மலைப்பாதையை அமைக்க அனுமதி அளித்தார். இதனைத் தொடர்ந்து, மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரையிலான 27 கி.மீ., ரயில் பாதை 15.06.1899 அன்று அமைத்து முடிக்கப்பட்டது. பின்னர், குன்னூர் முதல் உதகை வரை 15.10.1908 அன்று ரயில் பாதை போடப்பட்டது. இந்த மலை ரயில்பாதை 46.61 கி.மீ தூரம் ஆகும்.
மலைப் பாதையின் சிறப்பம்சங்கள்:
உதகை மலை ரயில் பயணிக்கும் பாதையில் மொத்தம் 212 வளைகளும், 16 குகைகளும், 31 பெரிய பாலங்களும், 219 சிறிய பாலங்களும் உள்ளன. மேட்டுப்பாளையம் முதல் உதகை இடையே கல்லார், ஹில்குரோவ், குன்னூர், அருவங்காடு, கேத்தி, லவ்டேல் ஆகிய ரயில் நிலையங்கள் உள்ளன. கல்லார் முதல் குன்னூர் வரை உள்ள 27 கி.மீ., தூரம் தண்டவாளங்களின் நடுவே பல்சக்கரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பல்சக்கரம் ரயில் தண்டவாளத்தை விட்டு விலகாமல் இருக்கவும், மலை மேல் ஏறி, இறங்கவும் உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 1992-ம் ஆண்டு வரை நிலக்கரி நீராவி என்ஜின் மூலம் மலை ரயில் மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை இயக்கப்பட்டது. அதன் பின்னர், குன்னூர் முதல் உதகை வரை டீசல் என்ஜின் மூலம் இயக்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை பல்சக்கரம் உள்ளதாலும், ரயில் மிகவும் சென்று வர வேண்டியது உள்ளதாலும், டீசல் என்ஜின் இயக்குவது குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை. இதன் காரணமாக இந்த வழித்தடத்தில் நிலக்கரி நீராவி என்ஜினும், பர்னஸ் ஆயில் என்ஜினும் கொண்டு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
பாரம்பரிய சின்னம் அந்தஸ்து:
இரண்டு வகையிலான என்ஜினில் இயங்கி வரும் நீலகிரி மலை ரயில் சுற்றுலாப் பயணிகளின் உள்ளத்தைக் கவர்ந்த ரயிலாகும். மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை உள்ள இயற்கை காட்சிகளை கண்டுகளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு மலை ரயில் பெரிதும் உதவுகிறது.

மலைப்பாதையில் ஊர்ந்து வரும் மலை ரயிலில் பயணம் செய்வது சுற்றுலா பயணிகளுக்கு புதிய அனுபவத்தை தருகிறது. மேலும், பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்ட மலை ரயிலை கடந்த 2005-ம் ஆண்டு தென் ஆப்ரிக்காவில் உள்ள டர்பன் நகரில் நடந்த பாரம்பரிய சங்கத்தின் 29-வது கூட்டத்தில் நீலகிரி மலை ரயில் மற்றும் டார்ஜிலிங் மலை ரயில் ஆகியவற்றுக்கு பாரம்பரிய சின்னம் அந்தஸ்து வழங்கப்பட்டது.

மலை ரயில் கட்டண உயர்வு:
நீலகிரி மலை ரயில் கட்டணம் குறித்து நாடாளுமன்றத்தில் ரயில்வே இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா பேசியதாவது :- 2017-18-ல் நீலகிரி மலை ரயில் ரூ. 26 கோடி நஷ்டத்தில் இயங்கியது. கடந்த 2016-17-ல் ரூ.1.99 கோடி வருவாய் கிடைத்துள்ளது. ஆனால், ரயிலுக்கு ரூ.26.74 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. 2017-18-ல் ரூ.1.82 கோடி வருவாய் கிடைத்த நிலையில், ரூ.28 கோடி ரூபாய் செலவு ஏற்பட்டுள்ளது, என்றார்.
நஷ்டத்திற்கு குறைவான கட்டணங்கள் வசூலிப்பதே காரணம் எனக் கூறப்படுகிறது. அதாவது, மேட்டுப்பாளையம் - உதகைக்கு முதல் வகுப்பு கட்டணம் ரூ. 195 ரூபாயும், இரண்டாம் வகுப்புக்கு ரூ. 30-ம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதேநேரத்தில், உதகை - குன்னுார் இடையே பயணம் செய்ய ரூ. 10 மட்டுமே வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில், மலை ரயில் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

இது குறித்து சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் (வர்த்தகம்) கே.மது விடுத்துள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது;- நீலகிரி மலை ரயிலில் மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட கட்டணம் அக்டோபர் மாதம் 8-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை முதல் வகுப்பு கட்டணம் ரூ.195-லிருந்து ரூ. 395 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல, இரண்டாம் வகுப்பு (முன்பதிவு) ரூ. 30-லிருந்து ரூ.130 ஆகவும், இரண்டாம் வகுப்பு (முன்பதிவற்றது) ரூ. 15லிருந்து ரூ. 75 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
வரவேற்பும் - கோரிக்கையும்..
மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூருக்கு முதல் வகுப்பு கட்டணம் ரூ. 174 லிருந்து ரூ. 295 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இரண்டாம் வகுப்பு (முன்பதிவு) கட்டணம் ரூ. 25-லிருந்து ரூ. 85 ஆகவும், இரண்டாம் வகுப்பு (முன்பதிவற்றது) ரூ. 10-லிருந்து ரூ. 45ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு சுற்றுலாவை பாதிக்காது என்பதால் உள்ளூர் மக்கள் வரவேற்பு அளித்தாலும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இந்தக் கட்டணம் அதிகம் என்பதால், பழைய கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
