திருப்பூர்: அவினாசியில் நிகழ்ந்த தீண்டாமை சம்பவத்தில் இந்து அமைப்புகள் தலையிடாததற்கான காரணத்தை இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
திருப்பூர்: அவினாசியில் நிகழ்ந்த தீண்டாமை சம்பவத்தில் இந்து அமைப்புகள் தலையிடாததற்கான காரணத்தை இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
அவிநாசியை அடுத்த திருமலைக்கவுண்டன்பாளையம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியின் சமையலராக அதேப் பகுதியைச் சேர்ந்த அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த பாப்பாள் (42) என்பவர் கடந்த 16-ம் தேதி பணியிட மாற்றம் பெற்றார். இதையறிந்த மற்ற சமூகத்தினர், அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த பாப்பாள் சமையல் செய்தால் தங்களது குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் எனக் கூறி, பள்ளியில் படித்துக் கொண்டிருந்த தங்களது குழந்தைகளை அழைத்துச் சென்றனர். மேலும், இவர்களது புகாரால் பாப்பாளை வேறு பள்ளிக்கு மாற்றம் செய்து வட்டார வளர்ச்சி அதிகாரி உத்தரவிட்டார்.
இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்ட பாப்பாளுக்கு ஆதரவாக அரசியல் கட்சியினரும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு எதிராக இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், "பாப்பாளுக்கு நிகழ்ந்த சம்பவம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. நாங்கள் அவருக்கு உதவ விரும்புகிறோம். ஆனால், சில தலித் கட்சிகள் வேண்டுமென்றே, அதனை தடுக்கின்றன. மேலும், இந்து கட்சிகள் அனைத்தும் தலித்துகளுக்கு ஆதரவாக இல்லை என்பது போன்று அவர்கள் சித்தரித்துவிட்டனர்," இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., கட்சிகள் ஆட்சி செய்து வருகின்றன. சாதி வன்கொடுயை தடுப்பதில் அண்ணா, பெரியார் ஆகியோர் தோல்வியடைந்துவிட்டனர். ஏனெனில், சமத்துவத்தை முழுமையாக பரவச் செய்யாததே இதற்கு காரணம் என அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிட்டால், பிரச்சனை பெரிதாகிவிடும் எனக் கருதி, காவல்துறையினர் பாப்பாள் விவகாரத்தில் தலையிட வேண்டாம் எனக் கூறியதாக அவர் கூறினார்.