கோவை: தனியார் விடுதியில் தங்கியிருந்த கல்லூரி மாணவிகளை விடுதி நிர்வாகமே தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயன்ற சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கோவை: தனியார் விடுதியில் தங்கியிருந்த கல்லூரி மாணவிகளை விடுதி நிர்வாகமே தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயன்ற சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நம் நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. பணியிடங்கள், பள்ளி-கல்லூரிகள், விடுதிகள் மற்றும் குடியிருப்புகள் என பெண்களை நோக்கிப் பயணிக்கின்றன வன்கொடுமைகள். இதைத் தடுக்க சட்டங்கள் இருந்தபோதும் குற்றங்கள் குறைவதாய் இல்லை.
அரசின் செயல்பாடுகள்
எந்த விதத்திலும் உடல் ரீதியான அல்லது மனரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துதல், பாலியல் தொந்தரவுகள் ஆகியவை பெண்களுக்கு எதிரான வன்முறையாக இந்திய அரசியல் சட்டம் கருதுகிறது.
இந்த பிரச்சனையில் சட்டங்களை மறு ஆய்வு செய்தல், திருத்தங்கள் கொண்டு வருதல், மகளிர் ஆணையம், மகளிர் காவல் நிலையங்கள் ஆகியவற்றில் புதிய கொள்கையை மேம்படுத்துதல் போன்ற நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகிறது.
அதேபோல், வேலைக்குச் செல்லும் பெண்கள், விடுதிகளில் பெண்களின் பாதுகாப்பு, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மறுவாழ்வளிக்கும் திட்டம் ஆகியவற்றையும் செயல்படுத்தி வருகிறது.
கோவையில் அதிர்ச்சி
சேரன் மாநகர் அருகே உள்ள வி.ஐ.பி. நகரைச் சேர்ந்தவர் ஜெகநாதன்(48). இவர் பாலரங்கநாதபுரம் ஜீவா வீதியில் தர்ஷனா என்ற பெயரில் பெண்கள் விடுதி நடத்தி வருகிறார். நான்கு மாடிகளைக் கொண்ட இந்த விடுதியில் கல்லூரி மாணவிகள், ஐ.டி. மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் இளம்பெண்கள் என 180 பேர் தங்கி உள்ளனர்.
இந்த விடுதியில் தண்ணீர்ப்பந்தல் பகுதியைச் சேர்ந்த புனிதா (32) என்பவர் வார்டனாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், விடுதி உரிமையாளரின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நேற்று முன்தினம் மாலை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் நடப்பதாகவும், அங்கு சென்று உணவு சாப்பிட்டு விட்டு வரலாம் என்றும், விடுதியில் தங்கி இருந்த ஐந்து மாணவிகளிடம் புனிதா கூறியுள்ளார்.
அதை நம்பிய அந்த மாணவிகள் புனிதாவுடன் அந்த ஓட்டலுக்குச் சென்றனர். அங்கு மாணவிகளுக்கு சாப்பிட தேவையான அனைத்தையும் புனிதா வாங்கிக்கொடுத்தார். பின்னர், மது அருந்துகிறீர்களா? என்று கேட்கவே, அந்த பழக்கம் எங்களுக்கு இல்லை, வேண்டாம் என்று மாணவிகள் கூறி உள்ளனர்.
தொடர்ந்து, விடுதி உரிமையாளர் மற்றும் சிலருடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று கூறி தவறான பாதைக்கு செல்ல மாணவிகளை அழைத்தார். இதற்கு மாணவிகள் மறுப்பு தெரிவிக்கவே, இந்த சம்பவம் குறித்து வெளியே தெரிவித்தால் கொலை செய்து விடுவதாக புனிதா மிரட்டல் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக, அந்த மாணவிகள் பெற்றோருக்கு தகவல் தெரிவித்ததோடு, பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் விடுதி உரிமையாளர் ஜெகநாதன், வார்டன் புனிதா ஆகியோர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாகிய இருவரையும் தேடி வருகின்றனர்.
பாதுகாக்கும் சட்டம்-2013
பெண்கள் பணிபுரியும் இடங்களிலோ அல்லது விடுதியிலோ நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாலியல் ரீதியாக பாதிக்கப்படுவதை தடுக்க பணிபுரியும் பெண்களை பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாக்கும் சட்டம்-2013 உதவுகிறது. இந்த சட்டத்தின் கீழ் பாலியல் வன்கொடுமை என்பது தொடுதல், பாலியல் ரீதியாக அழைத்தல், பாலியல் ரீதியாக பேசுதல், தீய நடவடிக்கையிலோ அல்லது வன்புணர்விலோ ஈடுபடுதல் என இதில் வரையறுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வழக்கறிஞர் லலிதா கூறுகையில், "பெண்களை பாதுகாக்க நம் சட்டத்தில் பல வழி வகைகள் உள்ளது. இருந்தாலும் தொடர்ச்சியாக நம் நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெற்று வருகிறது.

பணியிடங்களிலோ அல்லது விடுதிகளிலோ அல்லது வேறு இடங்களிலோ பெண்களுக்கு ஆபத்தான பாலியல் ரீதியான தொல்லைகள் வரும் பொழுது அதனால் பாதிக்கப்படும் பெண்கள் புகார் கொடுக்க வேண்டும். ஆனால் பல நேரங்களில் பெண்கள் பாலியல் தொல்லைகள் குறித்த புகார்களை கொடுப்பதில்லை.
இந்த நடவடிக்கையே குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்குப் பாதுகாப்பாக அமைகிறது. ஆகவே பெண்கள் தங்களின் பாதுகாப்பு தொடர்பான புகார்களை காவல் நிலையங்களில் அளிக்கலாம். அதற்கான பாதுகாப்பும் நம் சட்டத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோவையில் பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபட்ட விடுதி நிர்வாகி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விடுதியின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். மேலும், பெண்கள் விடுதிகளை போலீசார் கண்காணிப்பில் வைத்திருந்தால் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கலாம்." என்றார்.
ஜனநாயக மாதர் சங்கத்தின் பொறுப்பாளர் ராதிகா கூறுகையில், "வெளியூரில் இருந்து கோவைக்கு வந்து படிப்பவர்கள் மற்றும் பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவ்வாறு வருபவர்கள் மீது பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்து வருகிறது.

இதை கண்காணிக்க சமூக நலத்துறை தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். இதில் மகளிர் விடுதிகளை கண்காணிக்க அரசு தனி குழுக்களை அமைக்க வேண்டும். அதில் மாதர் சங்கங்களை இணைத்தால் சரியாக இருக்கும்." என்றார்.
பீளமேடு பகுதியில் உள்ள தனியார் விடுதியின் உரிமையாளர் பிரியா கூறுகையில், "பெண்களை நம்பி விட்டுச் செல்லும் வீடாகவே விடுதிகள் இருக்க வேண்டும். விடுதிகளில் தங்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் என்பது மன்னிக்க முடியாத குற்றம்.

அதேபோல், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தனியார் விடுதிகளில் விடும் பொழுது அந்த விடுதிகள் சரியான முறையில் உள்ளதா? அந்த விடுதியின் உரிமையாளர் நல்ல நபரா? என்று விசாரித்து சேர்ப்பது நலம். விடுதிகளில் அனாவசியமாக எந்த நபர்களையும் அனுமதிக்கக் கூடாது. மாதத்திற்கு ஒரு முறையாவது அந்த விடுதிகளுக்கு பெற்றோர் நேரில் சென்று விசாரிக்க வேண்டும். பாதுகாப்பு தர வேண்டிய விடுதியின் உரிமையாளர்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டால் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். பெண்கள் விடுதியை பெண்களே நிர்வகிக்க வேண்டும்." என்றார்.
"பிள்ளைகளின் வாழ்க்கைத் தரம் உயரும் வகையில், நல்ல கல்வி நிலையங்களில் பயிலவும், உயர்ந்த பணியிடங்களிலும் இருந்து பணி செய்யவும் வெளியூர்களுக்கு அனுப்புகிறோம். அதேபோல் நல்ல விடுதிகள் என்று எண்ணி நம்பிக்கையில் வெளியூர்களுக்கு அனுப்புகிறோம்.
ஆனால், நம்பி அனுப்பும் ஒரு சில விதிகளில் பெண் பிள்ளைகளுக்கு எதிராக நடக்கும் இது போன்ற கொடுமைகள் ஒட்டுமொத்த பெற்றோர்களையும் வேதனைப்படுத்துகிறது. விடுதிகளையும் அதன் நிர்வாகத்தையும் நம்பி பிள்ளைகளை அனுப்பினால், அங்கு நிர்வாகங்கள் மூலமாகவே பிரச்சனை கிளம்புவது கண்டிக்கத்தக்கது.
இதற்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அரபு நாடுகளில் கொடுக்கும் தண்டனைகள் போல, கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட வேண்டும். அந்த விடுதி உரிமையாளரின் செயல்பாடு பெற்றோர்களின் நம்பிக்கைக்கான துரோகமாகவே பார்க்கிறேன்." என்று வேதனை தெரிவிக்கிறார் பெற்றோரான அனிதா மதலைமுத்து.

விடுதிகளில் ஆதரவற்ற நிலையில் இருக்கும் பெண்களை குறிவைக்கும் கழுகுகளிடம் இருந்து, அவர்களை காக்க, மாநகர போலீசார் முனைப்பு காட்ட வேண்டும். வாராந்திர அல்லது மாதாந்திர கூட்டம் நடத்தி அவர்களின் குறைகளை கேட்டறிய சமூக நலத்துறையும் முன்வர வேண்டும். அப்போது தான் இது போன்ற குற்றங்கள் குறையும்.