கோவை: பேட்ச் ஒர்க் போடுவதற்கு கூட இலாயக்கில்லாத நிலையில் தற்போது கோவை மாநகராட்சி இருப்பதாக தி.மு.க., எம்.எல்.ஏ., நா.கார்த்திக் குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை: பேட்ச் ஒர்க் போடுவதற்கு கூட இலாயக்கில்லாத நிலையில் தற்போது கோவை மாநகராட்சி இருப்பதாக தி.மு.க., எம்.எல்.ஏ., நா.கார்த்திக் குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நிலவி வரும் பல்வேறு மக்கள் பிரச்சினைகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயனிடம் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ., நா.கார்த்திக் தலைமையில் தி.மு.க.,வினர் இன்று மனு அளித்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் எம்.எல்.ஏ., நா.கார்த்திக் பேசியதாவது:- தமிழக அரசு அறிவித்துள்ள 100 சதவீத சொத்து வரி உயர்வை திரும்பப் பெற வேண்டி பெற கோவை மக்கள் சார்பில் மாநகராட்சியின் மூலம் அரசுக்குப் பரிந்துரை செய்ய வலியுறுத்தியுள்ளோம். கடந்த பத்து வருடங்களாக நகரில் அமைக்கப்பட்டுள்ள சூரியசக்தியால் இயங்கும் மின் விளக்குகள் மாநகராட்சியால் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை.
தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட புட்டுவிக்கி சாலையை ரூ. 11 கோடி செலவில் புனரமைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், 15 நாட்களுக்கு முன் பெய்த மழையால் அந்த சாலை மீண்டும் குண்டும், குழியுமாகக் காட்சியளிக்கிறது. உள்ளாட்சி துறை அமைச்சரின் தொகுதியிலேயே தரமான சாலைகள் இல்லை. பேட்ச் ஒர்க் போடுவதற்கு கூட இலாயக்கில்லாத நிலையில், தற்போது கோவை மாநகராட்சி உள்ளது. அந்த சாலையை அமைத்த ஒப்பந்த நிறுவனத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்.
மேலும், காந்தி மாநகரிலிருந்து சத்தியமங்கலம் சாலை வரை உள்ள இரண்டு கிலோமீட்டர் சாலை மக்களால் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இது போன்று நூற்றுக்கும் மேற்பட்ட சாலைகள் நகரில் உள்ளன. அவை அனைத்தையும் தரமான சாலையாக சரி செய்து தருமாறு கோரிக்கை வைத்துள்ளோம்," என்றார்.

மேலும் அவர் கூறுகையில், சூயஸ் நிறுவனத்தோடு போடப்பட்ட ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி, ஏற்கனவே முடிவு செய்தபடி வரும் 31-ம் தேதி அனைத்து தோழமைக் கட்சிகளுடன் இணைந்து மிகப்பெரிய மக்கள் போராட்டம் நடத்தப்படும், என அவர் கூறினார்.