நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில், 17 கால்நடை மருத்துவர்களின் பணியிடம் காலியாக உள்ளது. வன விலங்குகளுக்கு சிகிச்சையளிப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில், 17 கால்நடை மருத்துவர்களின் பணியிடம் காலியாக உள்ளது. வன விலங்குகளுக்கு சிகிச்சையளிப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.

நீலகிரியில், கால்நடை வளர்ப்பை மேம்படுத்தவும், பால் வளத்தை பெருக்கிடவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், இலவச கால்நடைகள் வழங்கும் திட்டம் மேற்கொள்ளப்படுவதுடன், இதற்கான பயிற்சி மற்றும் பயனாளிகள் தேர்வு உள்ளிட்ட பணிகளை அந்தந்த பகுதி கால்நடை மருத்துவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், மாவட்டத்தில் குறைவான கால்நடை மருத்துவர்களே உள்ளதால் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் நீடித்து வருகிறது. இங்கு, மொத்தம் 30 கால்நடை மருந்தகங்கள் உள்ளதுடன், இவற்றில் 30 கால்நடை மருத்துவர்கள் பணியாற்ற வேண்டும்.
ஆனால், மாவட்டத்தில் மொத்தம் 13 கால்நடை மருத்துவர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். மீதமுள்ள 17 கால்நடை மருந்தகங்களில் கூடுதல் பொறுப்பாக அருகிலுள்ள கால்நடை மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர்.
பற்றாக்குறை
சமீபத்திய கணக்கெடுப்பு படி, மாவட்டத்தில் 10 ஆயிரம் வளர்ப்பு மாடுகள் உள்ளதுடன், ஆடுகள், கோழிகள் அதிகளவில் வளர்க்கப்பட்டு வருகிறது. இவற்றிற்கு, தேவைப்படும் நேரங்களில் சிகிச்சை அளிப்பதிலும் அரசின் திட்டங்களை செயல்படுத்துவதிலும் குறைவான மருத்துவர்களால் இயலாத நிலை உருவாகியுள்ளது.

அத்துடன் கூடலூர், பந்தலுார் தாலுகாவில், ஆறு கால்நடை மருந்தகங்கள் உள்ளன. ஆனால், இங்கு ஒரு கால்நடை மருத்துவர் மட்டுமே பணியாற்றி வருகிறார்.
இதனால், இரண்டு தாலுக்காவுக்கு ஒரு கால்நடை மருத்துவரால் எந்த பணிகளும் மேற்கொள்ள இயலாத நிலையில், பணிச் சுமையும் அதிகரிக்கிறது. இப்பகுதிகளில் வளர்ப்பு கால்நடைகள் மட்டுமின்றி, கூடலூர் வனக்கோட்டமும் அமைந்துள்ளதால், வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும், உரிய நேரத்தில் சிகிச்சையளிக்க முடியாத சூழ்நிலையும் உள்ளது.

தற்போது, முதுமலை புலிகள் காப்பகத்தில் பணியாற்றிய கால்நடை மருத்துவரும், திருப்பூருக்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில், கடந்த ஆறு மாதங்களாக, முதுமலையிலும் கால்நடை மருத்துவர் இல்லாமல், பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, பலமுறை மாநில அரசுக்கு சமூக நல அமைப்புகள், வனவிலங்கு ஆர்வலர்கள் மூலம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று வன ஆர்வலர்கள் குற்றம் சாட்டுவதோடு, உடனடியாக காலியாக உள்ள மருத்துவ பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர்.