கோவை: மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள பசுமை அங்காடியில் சுற்றுச்சூழலை பாதிக்கும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக துணிப்பைகள், மூங்கில் உருஞ்சிகள், காகிதப் பைகள், தண்ணீரில் கரையும் பைகள் என சுற்றுச்சூழலை பாதுகாக்க பல்வேறு வகையான பசுமை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
கோவை: மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள பசுமை அங்காடியில் சுற்றுச்சூழலை பாதிக்கும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக துணிப்பைகள், மூங்கில் உருஞ்சிகள், காகிதப் பைகள், தண்ணீரில் கரையும் பைகள் என சுற்றுச்சூழலை பாதுகாக்க பல்வேறு வகையான பசுமை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த வரிசையில் தற்போது மரக்கன்றுகள் வைக்கப்படும் கருப்பு நிற பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக பருத்தியால் நெய்யப்பட்ட துணிப்பைகள் கோவை மாநகராட்சியால் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மரக்கன்றுகளின் எடை மற்றும் அதன் அளவிற்கு ஏற்றார்போல் இந்த துணிப்பைகள் வடிவமைக்கப்படுகின்றன. சுமார் மூன்று ரூபாய் முதல் ஐந்து ரூபாய் வரையில் வெவ்வேறு அளவிலான துணிப்பைகள் பசுமை அங்காடியில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
"சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் அன்பளிப்புக்காகவும், விற்பனைக்காகவும் கருப்பு நிற பிளாஸ்டிக் பைகளில் மரக்கன்றுகள் வளர்க்கப்படுகின்றன. மரக்கன்றுகளை மண்ணில் வைத்த பிறகு பிளாஸ்டிக் பைகளை முறையாக அப்புறப்படுத்தப்படுவதில்லை. குறிப்பாக ஒரு கோடி மரக்கன்றுகளை நட்டதாக பெருமைப்பட்டு கொள்வோம், அதே நேரத்தில் ஒரு டன் அளவிற்கு பிளாஸ்டிக் பைகளை தூக்கி எரிந்திருப்போம்.

அவை மக்குவதற்கு பல வருடங்கள் ஆகும், மறுசுழற்சியும் செய்ய முடியாதவை. இதனால் சுற்றுச்சூழலுக்கும் மண்ணுக்கும் இயற்கை வளங்களுக்கும் ஏராளமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதைத் தவிர்க்கவே இந்த பசுமை துணிப்பைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவை எளிதில் மக்கக்கூடியவை, இவற்றால் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை." என்கிறார் பசுமை மரக்கன்று பைகளை தயாரித்து வரும் பீளமேட்டைச் சேர்ந்த சிவஷங்கர்.

மேலும், கோவை நகரில் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த பசுமை மரக்கன்று பைகளுக்கு இயற்கையை நேசிக்கும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என நம்புவதாகக் கூறினார்.
பசுமையை மீட்டெடுக்கும் முனைப்பில் இயங்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், மரம் வளர்க்க விரும்பும் பொதுமக்களும், பிளாஸ்டிக் தவிர்த்த பசுமை மரக்கன்று பைகளின் பயன்பாட்டை ஊக்குவிப்பதே உண்மையான சுற்றுச்சூழல் பாதுகாப்பாக அமையும்.