கோவை: போதைப் பொருட்களை இளைஞர்கள் சர்வ சாதாரணமாக உபயோகிக்கும் இடமாக ஆர்.எஸ்.புரம் பரியல் மைதானம் மாறுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: போதைப் பொருட்களை இளைஞர்கள் சர்வ சாதாரணமாக உபயோகிக்கும் இடமாக ஆர்.எஸ்.புரம் பரியல் மைதானம் மாறுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவின் சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டது கோவையில் உள்ள ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம். சட்டம் & ஒழுங்கு, குற்றங்கள் குறைவு போன்ற காரணத்தால் மத்திய அரசு இந்த விருதினை சமீபத்தில் ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்திற்கு வழங்கியது.
விருதினால் புகழ் பெற்ற இந்த காவல் நிலையத்தின் அருகில் உள்ள மைதானத்தில் தொடர்ந்து, சமூக விரோத செயல்கள் அரங்கேறி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பரியல் மைதானம்
ஆர்.எஸ்.புரம் பகுதியில் அமைந்துள்ள பரியல் மைதானம் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த மைதானம் அருகே பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி, காது கேளாதோர் பள்ளி, தமிழ் இசைக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு முக்கிய கல்வி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

பள்ளி மாணவர்கள் விளையாடுவதற்காக பரியல் மைதானத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், தற்போது பரியல் மைதானத்தில் சில இளைஞர்கள் அண்மைக்காலமாக சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவது அதிகரித்துள்ளது.
குறிப்பாக, இளைஞர்களும், கல்லூரி மாணவர்கள் சிலரும் ஒன்றிணைந்து கஞ்சா, போதை ஊசி, மது அருந்துதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவது தெரிய வந்துள்ளது. தற்போது, பட்டப்பகலில், சில இளைஞர்கள் அந்த மைதானத்தின் ஓரத்தில் அமர்ந்து கஞ்சா புகைப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துணிகரம்
பொதுமக்கள் அதிகமாக நடமாடும், கோவையின் மத்திய பகுதியில், இளைஞர்கள் இந்த துணிகர செயலில் ஈடுபடுவது அப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கும் வண்ணம் உள்ளது. மேலும், போதைப் பொருட்களை கைமாற்றிக் கொள்ளும் பிரதான இடமாகவும் இந்த பரியல் மைதானம் உள்ளது.
தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் இவர்களுக்கு எங்கிருந்து கிடைக்கிறது? இதனை போலீசார் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்த அத்தனை சமூக விரோத செயல்களும் காவல் நிலையம் அருகிலேயே நடைபெறுகிறது. எனவே, மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், மாணவர்கள் பயன்படுத்தும் பரியல் மைதானத்திற்குள் இது போன்ற சமூக விரோத செயல்கள் நடைபெறாதவாறு போலீசார் கண்காணிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.