நீலகிரி: தொடரும் தென்மேற்கு பருவமழை காரணமாக நீலகிரி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.
நீலகிரி: தொடரும் தென்மேற்கு பருவமழை காரணமாக நீலகிரி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.
ஊட்டி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றன. சுற்றுலா நகரமான ஊட்டியில் சுற்றுலா தலங்களை கண்டு ரசிப்பதற்காக ஆண்டுதோறும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
மேலும் சுற்றுலா பயணிகள் தங்கும் வகையில் ஊட்டியில் ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் உள்ளன. ஊட்டி நகராட்சியில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் குடிநீர் தேவையை பல்வேறு அணைகள் பூர்த்தி செய்கின்றது.
குறிப்பாக பார்சன்ஸ்வேலி அணை, மார்லிமந்து அணை, கோடப்பமந்து அப்பர் அணை, கோரிசோலா அணை, டைகர்ஹில் அணை, தொட்டபெட்டா அப்பர் அணை உள்ளிட்ட அணைகள் உள்ளன. கடந்த ஆண்டு ஊட்டியில் தென்மேற்கு பருவமழை குறைவாக பெய்தது. இதனால் அணைகளில் நீர் இருப்பு குறைந்த நிலையில் காணப்பட்டது.
ஆனால், இந்த ஆண்டு ஊட்டி நகரில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு வனப்பகுதிகளில் இருந்து பெருக்கெடுத்து வரும் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பதால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

ஊட்டியில் பெய்த தென்மேற்கு பருவமழை எதிரொலியால் முக்கிய அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகின்றது. கோடப்பமந்து அப்பர் அணை தனது முழு கொள்ளளவான 12 அடி, தொட்டபெட்டா லோயர் அணை 14 அடி, கிளன்ராக் அணை 7 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளன.
முக்கிய குடிநீர் ஆதாரமான பார்சன்ஸ்வேலி அணையின் நீர்மட்டம் 46 அடியாக உயர்ந்து உள்ளது. மார்லிமந்து அணை தனது 23 அடி முழு கொள்ளளவில், 12.5 அடியை எட்டி உள்ளது. தற்போது அந்த அணை கடல் போல் காட்சி அளிக்கிறது. கோடப்பமந்து லோயர் அணை நிரம்பும் தருவாயில் உள்ளது.