சேலம்: சேலம் - சென்னை இடையேயான பயண நேரத்தை மிச்சப்படுத்த ரூபாய் 10,000 கோடி செலவில் பசுமைவழி சாலை என்ற பெயரில் புதிய 8 வழிச்சாலை அமைக்க அரசு திட்டமிட்டது.
சேலம்: சேலம் - சென்னை இடையேயான பயண நேரத்தை மிச்சப்படுத்த ரூபாய் 10,000 கோடி செலவில் பசுமைவழி சாலை என்ற பெயரில் புதிய 8 வழிச்சாலை அமைக்க அரசு திட்டமிட்டது.
இந்த சாலை 13 கிலோமீட்டர் தூரம் வரை அடர் வனப்பகுதியில் அமைக்கப்படுகிறது. இதனால், அங்குள்ள மரங்களும், மலைகளும் அழிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மரங்களை வெட்டி, விளைநிலங்களை அழித்து, ஒரு லட்சம் விவசாயிகளை பாதிப்புக்கு உள்ளாக்கும் மற்றும் வன சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த பசுமை வழிச் சாலைக்கு சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

கார்ப்பரேட் சாலை
தற்போது அமைக்கப்படும் இந்த எட்டு வழிச் சாலையானது பெருமுதலாளிகளுக்கு மட்டுமே பயனளிக்கும் என்றும், சேலம் மற்றும் அதன் சுற்று வட்டார மலைப்பகுதிகளில் இருந்து வளங்களை அழித்து வியாபாரம் செய்யவே இந்த சாலை அமைக்கப்படுவதாகவும் ஒரு தரப்பினர் தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
சாலை அமைப்பதற்கு 2,000 ஹெக்டேருக்கும் மேல் நிலம் கையகப்படுத்த வேண்டும் என்றாலும், தற்பொழுது நான்கு மணி நேரமாக இருக்கும் பயண நேரம் இரண்டு மணிநேரமாகக் குறைந்து மூன்று நகரங்கள் இணைக்கப்பட்டு, தொழில் வளர்ச்சி, மற்றும் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்பதால் தமிழக அரசு இந்த திட்டத்தில் முனைப்பு காட்டிவருகிறது.
எத்தனை எதிர்ப்பு வந்தாலும், அரசு இந்த திட்டத்தை கைவிடுவதாய் இல்லை. "பசுமை வழிச் சாலை கட்டாயம் அமைந்தே தீரும்" என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முழங்கியது, அதற்கு உதாரணமாக அமைந்தது.
கைது
ஆனாலும், மக்கள் விடுவதாய் இல்லை, பயனற்ற சாலை எதற்கு? என்ற கோஷங்கள் சமூக ஊடகங்களில் முழங்கிக் கொண்டிருக்கின்றன. இது குறித்து பல சமூக ஆர்வலர்களும் தங்கள் கருத்தைப் பதிவு செய்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சித்தனர்.
அப்போது தான், அரசு தனது வழக்கமான அணுகுமுறையைத் தொடங்கியது. இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை காவல்துறை வாயிலாக கைது செய்து சிறையிலடைக்கும் அடக்குமுறையே அது.

அதன்படி, பசுமை வழிச்சாலைக்கு எதிராகவும், வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாகவும் கடந்த 16-ம் தேதி நடிகர் மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டார். இந்த கைது நடவடிக்கை அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்க, அடுத்ததாக, இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்திற்காக நேற்று இரவு இயற்கை ஆர்வலரான பியூஷ் மானுஷ் கைது செய்யப்பட்டார்.

அதுமட்டுமல்லாது, பசுமை வழிச் சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முதியவர்களையும் தற்போது காவல்துறையினரை கொண்டு அடக்கி, கைது செய்து வருகிறது. தமிழக அரசு.
குரல்வளை
அரசின் தவறான கொள்கை முடிவுகளுக்கு எதிராகப் போராடும் மக்களைக் கைது செய்வதும், அவர்கள் மீது அடக்குமுறையை திணிப்பதும் ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்கும் விதமாக அமைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்திருந்தனர்.
ஆனால், இதெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாத அரசு மீண்டும் சமூக ஆர்வலரான வளர்மதியை கைது செய்துள்ளது. ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்த வளர்மதி கடந்த ஆண்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார். இந்த சூழலில், பசுமை வழிச்சாலைக்கு நில அளவைக்கு ஆச்சாங்குட்டப்பட்டி என்ற பகுதிக்கு வந்த வட்டாட்சியரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

இந்த முற்றுகையில் கலந்து கொண்ட வளர்மதியை போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்து கைது செய்துள்ளனர்.

இப்படியாக, சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களை தொடர்ந்து கைது செய்து கொண்டிருக்கும் சூழலில், போராட்டம் தீவிரமடைய வாய்ப்புள்ளது. அவ்வாறு தீவிரமடைந்து அந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி படுகொலை செய்வதை விடுத்து, மக்கள் போராட்டத்திற்கு நல்ல தீர்வு கிடைக்க அரசு முனைப்பு காட்ட வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.