கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆட்சிமன்ற குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்நிலையில் தினக்கூலி மற்றும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி 200-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தமிழக உயர்கல்வித் துறை செயலரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆட்சிமன்ற குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்நிலையில் தினக்கூலி மற்றும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி 200-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தமிழக உயர்கல்வித் துறை செயலரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாரதியார் பல்கலைக்கழகத்தில் தினக்கூலி மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் 550 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு ஏற்கனவே வழங்கிவரும் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு இதற்காக தனி குழு ஒன்று அமைக்கப்பட்டு அதன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அந்த அறிக்கையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் தினக்கூலி மற்றும் தொகுப்பூதிய பணியாளர்களின் ஊதிய உயர்வு அடிப்படையில் பல்கலைக்கழக பணியாளர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை ஊதிய உயர்வு வழங்கப்படாத சூழலில் பாரதியார் பல்கலைக் கழக பொறுப்பாளரும் தமிழக உயர்கல்வித்துறை முதன்மை செயலாளருமான சுனில் பாலிவால் தலைமையில் பல்கலைக் கழக ஆட்சி மன்றக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.
அப்போது அங்கு திரண்ட 200-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஊதிய உயர்வு தொடர்பாக உயர்கல்வி துறை செயலரிடம் முறையிட்டனர். ஆனால் அவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்த உயர்கல்வித் துறை செயலர், கடந்த 2015-ம் ஆண்டு ஊதியத்தை அடிப்படையாகக் கொண்டு அதில் 25 சதவிகிதம் ஊதியம் உயர்த்தி வழங்குவதாகக் கூறினார். ஆனால் அதனை ஏற்காத பணியாளர்கள் கூட்டம் நடைபெற்ற அரங்கின் முன்பாக தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, கூட்டம் முடிந்து வெளியே வந்த சுனில் பாலிவாலை முற்றுகையிட்ட பணியாளர்கள் மீண்டும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினர் அப்போதும் அவர்களை சந்திக்க மறுத்த உயர்கல்வித் துறைச் செயலர் தற்போது 25 சதவிகித ஊதிய உயர்வு மட்டும் வழங்கப்படும் எனவும் புதிய குழு ஒன்றை அமைத்து ஊதியத்தை நிர்ணயம் செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஊதியத்தில் முரண்பாடு உள்ளன. அதனை அடிப்படையாகக் கொண்டு தாக்கல் செய்யப்பட்ட புதிய ஊதிய உயர்வு தொடர்பான அறிக்கையிலும் தவறுகள் இருப்பதால் அதனை செயல்படுத்த முடியாது. மேலும், இது தொடர்பாக பணியாளர் சங்க நிர்வாகத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம்." என்றார்.