கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நிலவி வரும் கடும் வறட்சியின் காரணமாக கருகிபோன தென்னை மரங்களை கனத்த மனதுடன் விவசாயிகளே வெட்டி சாயிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நிலவி வரும் கடும் வறட்சியின் காரணமாக கருகிபோன தென்னை மரங்களை கனத்த மனதுடன் விவசாயிகளே வெட்டி சாயிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் தென்னை நகரமான பொள்ளாச்சியில் பிரதானமாக தென்னை சாகுபடியே அதிகளவு உள்ளது. ஒரு காலத்தில் விவசாய தோட்டங்களில் பச்சை பசேல் என காணப்பட்ட தென்னை மரங்கள், தற்போது எலும்பு கூடுகளாக காணப்படுவது விவசாயிகளிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக மழை இல்லாத காரணத்தால் நிலத்தடி நீர்மட்டம் முற்றிலும் குறைந்தும், கிணறுகள் வற்றியும், தண்ணீர் இல்லாத காரணத்தால் நீண்ட கால சாகுபடியான தென்னை சாகுபடி முற்றிலும் ஆழியும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பரம்பிக்குளம் ஆழியார் திட்டம் மூலம் பாசன தண்ணீர் பெற்று தென்னை சாகுபடி செய்த சிறுகுறு விவசாயிகள் தங்களது நீண்ட நாள் கோரிக்கையான ஆயிரம் ஏக்கர் பாசன கால்வாய் பகுதிகளை ஒரு மடை பாசன முறையில் செயல்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 2002-ம் ஆண்டு சோதனைக்காக செயல்படுத்தபட்ட ஒரு மடை பாசன முறையை கடந்த 2013-ம் ஆண்டு செயல்படுத்த தமிழக அரசுக்கு பொதுப்பணித் துறை அதிகாரிகள் பரிந்துரை செய்தனர். ஆனால், பி.ஏ.பி பாசனத்திட்டத்தில் 42 கிளை வாய்க்கால்களில் ஆயிரம் ஏக்கருக்கு குறைவான பாசனம் முறை இருப்பதால் ஒரு மடை பாசன முறை செயல்படுத்தாமல் இருகின்றனர் என்று விவசாயிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சி அருகேயுள்ள சுந்தரகவுண்டனூர், போளியகவுண்டனூர் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் ஒரு மடை பாசன முறை செயல்படுத்தாத காரணத்தால் தற்பொழுது கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால், தென்னை மரங்கள் கருகி மொட்டை மரங்களாகக் காட்சியளிக்கிறது.

இது குறித்து விவசாயி முத்து ரத்தினம் கூறுகையில், "முடிந்த வரை தண்ணீரை விலைக்கு வாங்கி தென்னை மரங்களுக்கு ஊற்றி வந்தாலும், அடிக்கும் வெயிலுக்கு தென்னை மரங்களை காப்பற்றுவது மிகவும் சிரமமாக இருக்கிறது," என்றார்.
மற்றொரு விவசாயியான கனகராஜ் கூறியதாவது:- பொள்ளாச்சியில் இருமடை விவசாய பகுதிகளான கோவில்பாளையம் மடை பகுதிகளில் ஒரளவு விவசாயம் காப்பாற்றப்பட்டுள்ளது. ஆனால், ஒரு மடை பகுதிகளில் வறட்சி காரணமாக தென்னை மரங்கள் கருகி மொட்டை மரமாக காட்சியளிக்கிறது. சுமார் 40 ஆயிரம் தென்னை மரங்களை விவசாயிகளே வெட்டி தங்களின் குடும்ப செலவுக்கு உபயோகித்து வருகின்றனர். தண்ணீர் தட்டுபாட்டால் கால்நடைகளுக்கும் கூட தண்ணீர் இல்லாத நிலை உள்ளது, எனக் கூறினார்.

வறட்சியினால் ஏற்பட்டுள்ள இழப்புக்கு தென்னை மரம் ஒன்றுக்கு ரூ. 4,000 வரை இழப்பீடு தமிழக அரசு வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். அதேபோல, நிலத்தடி நீர் உயரவும், கால்நடைகளுக்கு குடிநீர் தட்டுப்பாட்டை போக்கவும், பி.ஏ.பி திட்டத்தில் ஒரு மடை பாசனத் திட்டத்தை செயலபடுத்த தமிழக அரசு உடனே முன் வர வேண்டும். இல்லையெனில், பொள்ளாச்சி பகுதியை வறட்சி பகுதியாக அறிவித்து பாதிக்கப்பட்ட தென்னைக்கு உரிய நிவரணம் வழங்க வேண்டும் என்றும் தென்னை விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.