திருப்பூர்: திருப்பூரில் அதிவேகமாக சென்ற எம்.பி. சத்தியபாமா-வின் கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தி.மு.க உறுப்பினர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்: திருப்பூரில் அதிவேகமாக சென்ற அ.தி.மு.க. எம்.பி. சத்தியபாமா-வின் கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தி.மு.க உறுப்பினர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குன்னத்தூர் தேவம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார் (25). அப்பகுதியில் பனியன் கம்பெனி நடத்தி வருகிறார். இவர் திராவிட முன்னேற்ற கழகத்தில் உறுப்பினராகவும் உள்ளார்.
இந்த நிலையில், நேற்று அவர் அருகிலுள்ள கோவில் திருவிழாவுக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று விட்டு தனது நிறுவனத்திற்குச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, கோபி - குன்னத்தூர் சாலை செட்டிகுட்டை பிரிவு என்னுமிடத்தில் எம்.பி. சத்தியபாமா-வை கோவை விமான நிலையத்திலிருந்து அழைத்து வர அவரது காரை ஓட்டுநர் செந்தில்குமார் வேகமாக இயக்கி வந்ததில் கட்டுப்பாட்டை இழந்து அருண்குமார் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் அருண்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த குன்னத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று அருண்குமார் உடலை மீட்டு அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.