கோவை : தமிழகம் முழுவதும் மணல் கொள்ளை என்பது சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அவ்வாறு இயற்கை வளமான மண் வளத்தை சுரண்டி பணம் பார்க்கும் கும்பல் கோவையையும் விட்டு வைக்கவில்லை. இங்கும் மணல் கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர்.
கோவை : தமிழகம் முழுவதும் மணல் கொள்ளை என்பது சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அவ்வாறு இயற்கை வளமான மண் வளத்தை சுரண்டி பணம் பார்க்கும் கும்பல் கோவையையும் விட்டு வைக்கவில்லை. இங்கும் மணல் கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர்.

குறிப்பாக, ஆலாந்துறையை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இரவு, பகல் பாராமல் மணல் கொள்ளை தொடர்கிறது. மணல் கொள்ளையைத் தடுக்க சமூக ஆர்வலர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், கொள்ளை நின்றபாடில்லை.

இந்நிலையில், மணல் கொள்ளையில் ஈடுபடும் நிறுவனத்திடம், கோவை பா.ம.க-வைச் சேர்ந்தவர்கள் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. அதில், பா.ம.க நிர்வாகியிடம் பேசும் இருவர், "ஒவ்வொரு டைப்பும் ஒவ்வொரு ரேட்டு. ஆத்து மணலும் இருக்கு. கூலி, ட்ரான்ஸ்போர்ட் எல்லாம் பொறுத்துதான் விலை வரும். போலீஸாருக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ. 2,000 கொடுக்கிறோம். அதேபோல, ஆர்.டி.ஓ-வுக்கும் காசு கொடுக்கணும். இல்லாட்டி வண்டி எடுக்க முடியாது பெரிய பிரச்னையாகிடும்" எனக் கூறுகின்றனர்.
இந்நிலையில், மணல் கொள்ளையில் ஈடுபட்டதாகக் கூறி, பா.ம.க-வினர், இன்று காலை ஒரு வாகனத்தை போலீஸாரிடம் பிடித்துக் கொடுத்தனர். அப்போது, மணல் கொள்ளையைத் தடுக்கக் கோரி முன் அனுமதியின்றி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி பா.ம.க-வினரை போலீஸார் கைது செய்தனர்.

இதுதொடர்பாகப் காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், "வாகனத்தில் கொண்டு வந்தது எம்-சாண்ட் மணல். அதற்கான பில் எல்லாம் வைத்துள்ளனர். வண்டியை ஸ்டேஷனில்தான் வைத்துள்ளோம். அனுமதியின்றி போராட்டம் நடத்தியதால் பா.ம.க-வினரை கைது செய்துள்ளோம். இது தொடர்பாக ஆர்.டி.ஓ-வுக்கு தகவல் கொடுத்துள்ளோம். சம்பந்தப்பட்ட நிறுவனத்தினரையும் வரக் கூறியுள்ளோம். இது ஆற்று மணல் என்று உறுதியானால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் மீது நடவடிக்கை எடுப்போம். எம்-சாண்ட் மணல் என்றால், பா.ம.க-வினர் மீது நடவடிக்கை எடுப்போம்" என்றனர்.
இது குறித்து போராட்ட ஒருங்கிணைப்பாளர் அசோக் ஸ்ரீனித்தி கூறுகையில், "நொய்யல் மணல் திருட்டு சம்பவம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. குறிப்பாக. ஆலாந்துறை பகுதில் 12 அடி வரை குழி தோண்டி மணல் கொள்ளை அடிக்கிறாங்க. இந்த மணல் கொள்ளையர்களை பல நாட்களாக பின் தொடர்ந்து உறுதிப்படுத்தி தான் நாங்க பிடிச்சோம். லாரி ஓட்டுநரை நாங்கள் அடிக்கவில்லை. லாரியை தான் தடுத்தோம். ஆனால், இப்படி தப்பு செஞ்சவங்களை விட்டுட்டு தப்பை தடுக்க வந்த எங்களை கைது செய்யும் நடவடிக்கைகள் ஜனநாயக விரோதம்" என்றார்.