வெள்ளைக்காரர்களிடம் பல ஆண்டுகளாக அடிமையாக இருந்த நமக்கு புது வாழ்க்கை பிறந்துவிட்டதாக எண்ணி, நாம் அதில் பயணம் செய்து வரும் நிலையில், இன்னும் கொத்தடிமைகள் கண்ணில் தென்படுவது அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. கொத்தடிமை தொடர்பான புகார்கள் மீது அரசும், அதிகாரிகளும் உடனடி நடவடிக்கை எடுத்து, அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது...
வெள்ளைக்காரர்களிடம் பல ஆண்டுகளாக அடிமையாக இருந்த நமக்கு புது வாழ்க்கை பிறந்துவிட்டதாக எண்ணி, நாம் அதில் பயணம் செய்து வரும் நிலையில், இன்னும் கொத்தடிமைகள் கண்ணில் தென்படுவது அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. கொத்தடிமை தொடர்பான புகார்கள் மீது அரசும், அதிகாரிகளும் உடனடி நடவடிக்கை எடுத்து, அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது...
கொத்தடிமை முறை :
கொத்தடிமை முறை என்பது ஒரு மனிதனை கொடுக்கும் ஊதியத்திற்காக மனிதத் தன்மையற்று நடத்தும் செயலாகும். அவனது தனிப்பட்ட வாழ்க்கை குடும்பம் ஆகியவற்றை தான் மேற்கொண்டு வரும் பணிக்காக அடமானம் வைக்கும் செயலாக உள்ளது. இந்த முறையில், குறிப்பாக முன்பணம் வாங்கிய தொழிலாளிகள், முதலாளியிடம் வாங்கிய பணத்திற்காக நிறுவனங்களின் கைபிடியிலேயே அடிமைகளாக பலர் வாழ்ந்து வருகின்றனர். இதில், அதிகமாக குடும்பத்தோடு அடிமையாக வாழ்பவர்கள் தான் அதிகம் என ஆய்வுகள் கூறுகின்றன. இதுபோன்ற கொத்தடிமைகள் விரும்பினாலும், வேறு இடத்திற்கு வேலைக்கு போக இயலாது. அதேபோல, தாங்கள் வேலை செய்யும் இடத்தை விட்டு பொழுதுபோக்குக்காக கூட வெளியில் வரக்கூடாது. இந்த கொத்தடிமை தனத்தினால் நம் நாடே பல ஆண்டுகளாக பிரிட்டீஷ்காரனிடம் கொத்தடிமையாக இருந்து வந்தது. ஒரு குறிப்பிட்ட இந்தியா மட்டுமில்லா, பல்வேறு நாடுகளிலும் இந்தக் கொத்தடிமை முறை தலைவிரித்தாடியது.
கோவையிலும்...கொத்தடிமைகள்..
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் கிராமத்தில் ஒரு குடும்பம் கொத்தடிமைகளாக மாட்டி தவித்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மகாலிங்கம். இவர், கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு அவசர தேவைக்காக அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு அப்பாஸ் என்பவருக்குச் சொந்தமான ஸ்பின்னிங் மில்லில் தனது மனைவியுடன் பணியில் இணைந்தார். கணவன், மனைவி இருவரும் கடந்த 5 மாதங்களாக அப்பாஸிடம் வேலை செய்து வருகின்றனர். ஆனால், ஒரு மாதமாக மகாலிங்கத்தை பணம் திரும்பக் கேட்டு மில்லின் முதலாளி அப்பாஸ் கடுமையாக நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதனால், மகாலிங்கம் நாங்கள் இந்த இடத்தில் இருந்து வேறுபக்கம் வேலைக்கு செல்கிறோம். இந்த ஊரிலேயே உள்ள வேறு இடத்தில் வேலை செய்து, உங்கள் பணத்தை கொடுத்து விடுகிறோம் எனக் கூறியுள்ளார் மகாலிங்கம். இதனால், இன்னும் கோபம் அடைந்த முதலாளி அப்பாஸ், நீங்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள். ஆனால், உங்கள் குழந்தைகளை பணம் கொடுக்கும் வரை வெளியில் விடமாட்டேன் என தெரிவித்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த மகாலிங்கத்தின் குடும்பத்தினர் செய்வதறியாமல் திகைத்துள்ளனர்.
கண்ணீர் மல்க வேதனை
இது குறித்து பாதிக்கப்பட்ட மகாலிங்கம் கூறியதாவது :- என் பெயர் மகாலிங்கம். நான் விருதுநகர் (பி.புதுப்பட்டி) மாவட்டத்தை சேர்ந்தவன். மனைவி மகேஷ்வரி.எனக்கு பாலா சுதாகர் (7), மகித் (4) ஆகிய இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். பண நெருக்கடி காரணமாக நாங்கள் சொந்த ஊரில் இருந்து கோவைக்கு வேலை தேடி வந்தோம். கண்ணம்பாளையத்ததில் இருக்கம் ஸ்பின்னிங் மில் ஒன்றில் குடும்பத்துடன் வேலைக்கு சேர்ந்தோம். சகோதரியின் மகன் திருமணத்திற்காக எனது முதலாளியிடம் ரூ. 70 ஆயிரம் கடன் பெற்றிருந்தேன். கடந்த 5 மாதங்களாக அதில், ரூ. 10,000 கொடுத்து விட்டேன். இருப்பினும், பணத்தை தருமாறு என்னை கொத்தடிமை போல நடத்தியதுடன், எனது மகன்களை அடமானம் வைத்துவிட்டு செல்லுமாறு எனது முதலாளி கூறினார். ஒருகால் ஊனமுற்றிருந்தாலும், தன்னால் பணத்தை வெளியே சென்று சம்பாதிக்கலாம் என நினைத்தால், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அது முடியாமல் போனது.

பின்னர், இது தொடர்பாக சூலூர் காவல்நிலையத்திலும், தாசில்தார் அலுவலகத்திலும் புகார் கொடுத்தேன். ஆனால், அவர்கள் அலட்சியமாக நடந்து கொண்டார்கள். ஏழையான நாங்கள் யாருடைய பணத்திற்கும் ஆசை படமாட்டோம். என்னுடைய கெட்ட நேரம் இவ்வாறு மாட்டிக் கொண்டேன். காசுக்காக பொண்டாட்டி, குழந்தைகளை அடமானம் வைக்க வேண்டும்..?. இந்த ஊர்லயே இருந்து கொண்டு என்னால், கடனை அடைக்க முடியும். குழந்தைகளை அடமானம் வைத்துவிட்டு, என்னால் எப்படி வேலை செய்ய முடியும்..?. இவ்வாறு கண்களில் கண்ணீர் மல்க வேதனை கூறினார்.

அலட்சியமான பதில்
மகாலிங்கத்தின் குடும்பத்தின் நிலை குறித்து சூலூர் தாசில்தார் ஜெகதீஸ்வரனிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது :- கடந்த சில நாட்களுக்கு முன்பு மகாலிங்கம் என்னை நேரில் வந்து சந்தித்தார். அவர் தனது முழு விவரங்களையும் என்னிடம் சொன்னார். நான் காவல்நிலையத்தில் புகார் அளிக்கக் கூறினேன். அவர் கடன் வாங்கியுள்ளார். ஆகவே, அவரை அவரது முதலாளி பணத்தை கொடுத்து விட்டு செல்லும்படி தெரிவித்துள்ளார். இது தான் நடந்துள்ளது. இது எப்படி கொத்தடிமையாகும். என்றார். மேலும், மகாலிங்கத்தின் குடும்பத்தினரை மீட்பது தொடர்பான நம் கேள்விக்கு, பொறுத்திருந்து பார்ப்போம், என்றார்.
மனித உரிமை மீறல்
இதுகுறித்து மூத்த வழக்கறிஞர் முருகேசன் பேசுகையில், "ஒரு மனிதனை அடைத்து வைத்திருப்பதே மனித உரிமை மீறல். தொழிலாளி முதலாளியிடம் வாங்கிய அட்வான்ஸ் பணத்துக்கு வேண்டி குடும்பத்தை சார்ந்தவர்களைப் பிடித்து வைத்து இருப்பது கொத்தடிமை தான். இது கண்டிப்பாக தடுக்க வேண்டிய விஷயம். தொழிலாளர் அலுவலர்களும், தாசில்தார்களும் அடிக்கடி தொழிற்சாலைகளில் ஆய்வு செய்ய வேண்டும். தொழிலாளர்களின் ஏழ்மையைப் பயன்படுத்தி தொழில் நிறுவனங்கள் தொழிலாளர்களை விலைக்கு வாங்கியது போல், வாங்கிய பணத்தை தரும் வரை என் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும் என பிடித்துவைப்பது கொத்தடிமை முறை தான். இதைத் தடுக்க சட்டம் இயற்றி 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆனால், கொத்தடிமை முறை இன்னும் ஒழிக்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் அரசும், அதிகாரிகளும் மவுனம் சாதிப்பது வேதனையானது," என்றார்.
செயல்பாடற்று கிடக்கும் சட்டம்
தமிழகத்தில் இருந்து பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இலங்கையில் உள்ள தேயிலை தோட்டத்திற்கு கொத்தடிமைகளாகக் கூட்டி சென்றனர். மக்களிடம் பல ஆசைவார்த்தைகளைக் கூறி, பண ஆசைகளை காட்டி நாடு கடத்தினர். பல்லாயிரக்கணக்கான மக்கள் இலங்கையில் உள்ள தேயிலை தோட்டங்களுக்கு குடிபெயர்ந்தனர். இப்படிக் கூட்டி செல்லும் போது 100 பேரை ஏற்ற வேண்டிய தோணிகளில் 500 பேர், 1,000 பேர் வரை ஏற்றிச் சென்றதால், பல தோணிகளில் பல உயிர்கள் கொத்து கொத்தாக மடிந்து மீனுக்கு இரையாகின. இப்படித்தான் ஆயிரக்கணக்கான தமிழர்களுடன் பயணித்த ‘ஆதிலட்சுமி' கப்பலும் கரைசேர்வதற்கு முன்பாகவே கடலில் மூழ்கியது. 1841-49க்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும் 70 ஆயிரம் தமிழர்கள் பலியானதாக வரலாறு கூறுகிறது. ஆக கொத்தடிமைகளாக கூட்டி செல்லப்படும் ஒவ்வொரு இடத்திலும் துயரமே மிஞ்சும்.
கொத்தடிமை ஒழிப்பு சட்டம் 1976-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. அனைத்து கொத்தடிமை தொழிலாளர்களையும், விடுவிக்கவும், அவர்களது கடன்களை ரத்து செய்யவும், அவர்களது மறுவாழ்வுகளை மேற்கொள்ளவும் இந்த சட்டம் இயற்றப்பட்டது. அதேபோல, கொத்தடிமைகளாக நடத்தும் முதலாளிகள் மீது நடவடிக்கைகள் எடுக்கவும் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், நிறைவேற்றி பல ஆண்டுகள் ஆகியும் கொத்தடிமை முறைகள் ஒழிக்கப்படவில்லை. கண்காணிக்க வேண்டிய அரசுத்துறை நிர்வாகமும், தொடர் கண்காணிப்பில் இல்லாததால் இதுபோன்ற மனிதநேயமற்ற செயல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
எம்.ஜி.ஆர்., படங்களே உவமை
எம்.ஜி.ஆர். நடித்த 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் கூட அடிமைகளின் நிலை ஆழமாக எடுத்துக் கூறப்பட்டிருக்கும். இதில், தாங்கள் வளமாக வாழ மனித சமுதாயத்தை கொடூரமாக அடிமைப்படுத்தும் நிகழ்வுகளைத் தெளிவாக எடுத்துக்காட்டப்பட்டிருக்கும். இந்தப் படத்தில் காட்டும் அடிமைகள் சிறையில் இருப்பது போன்ற காட்சிகள் இருக்கும். அந்தப் படத்தில், அடிமைகள் நாடு கடத்தும் போது தான் ஜெயலலிதா, அடிமையான எம்.ஜி.ஆரை வார்த்தைகளால் வரவேற்பார். அதற்கு எம்.ஜி.ஆர் "அடிமைகள் வரவேற்கப்படுவது இல்லை" என்பார். இப்படி தான் அடிமைகளின் நிலை உள்ளது. அடிமைகள் தங்களின் சுய துக்கம், இன்பம் அனைத்தையும் தாண்டி தான் வாங்கிய பணத்திற்காக வாழ்ந்து வருகின்றனர். இப்படி வாழும் மனிதர்கள் வரவேற்கப்படுவதில்லை. கண்ணீரோடு விடுதலைப் பெற காத்திருக்கின்றனர்.
தீர்வு கிடைக்குமா..?
பல்வேறு குடும்ப கஷ்டங்களுக்காக வேலை தேடி திரியும் ஏழை, எளிய உழைப்பாளிகளை அவர்களின் உழைப்பை வைத்தே அடிமைப்படுத்துவது என்பது மனிதநேயம் உள்ளவர்களை தூங்கவிடாது. ஆக மக்களைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரிகள் யாரோ ஒருவர் வந்து இந்த எளிய தொழிலாளியை வந்து மீட்பார்கள் என்று பொறுமைகாப்பது வேதனையளிக்கிறது.