கோவை: போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவதன் அவசியத்தை வலியுறுத்தி கோவை மாநகர போலீசார் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் இணைந்து மாநகர சிக்னல்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.
கோவை: போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவதன் அவசியத்தை வலியுறுத்தி கோவை மாநகர போலீசார் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் இணைந்து மாநகர சிக்னல்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.

கோவை மாநகர காவல்துறையும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இணைந்து விபத்தில்லா பயணத்தை மேற்கொள்வது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை அவ்வப்போது நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நேற்று தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் மாநகர சிக்னல்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில், சாலை விபத்தினால் ஏற்படும் இன்னல்கள் மற்றும் அதனைத் தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்பட்டது.

புரூக்பீல்ட் சாலையில், சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சுமார் 2 மணி நேரம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், ஹெல்மெட் அணிந்தவர்களுக்கும், காரில் சீட் பெல்ட் அணிந்தவர்களுக்கும் இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்களைத் தெரிவித்து கௌரவப்படுத்தினர். மேலும், அதிக வெளிச்சத்தை தரும் வாகனங்களின் விளக்குகளுக்கு கருப்பு ஸ்டிக்கர்களை ஒட்டினர்.

இது குறித்து இந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் கோவை மாவட்ட தலைவர் ஜெஃப்ரி ஜோஸ்வா கூறுகையில், "இளைஞர்களாகிய நாங்கள் காவல்துறையுடன் இணைந்து சாலை போக்குவரத்து பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுகளை பொதுமக்களிடையே ஏற்படுத்தி வருகிறோம். நேற்று, புரூக் பாண்ட் சாலை சிக்னலில் வாகன ஓட்டிகளுக்கு சாலை விதிகளின் கட்டாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினோம்.
போக்குவரத்து விதிகளை பொதுமக்களாகிய நாம் பின்பற்றினால் யாருக்கும் எந்த பிரச்சினையும் இருக்காது." என்றார்.